ரஷ்ய விமானம் விபத்துக்கு முன்பாக தொழில்நுட்ப பிரச்சினை - கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்த விமானி
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான KGL-9268 என்ற A-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் 217 பயணிகள், 7 ஊழியர்கள் பயணம் செய்தனர். ஆனால், விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்தது.
விமானம் மாயமானது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விபத்து நடைபெறுவதற்கு முன்பாக எகிப்து விமான கட்டுப்பாடு அறையை தொடர்புக்கொண்ட விமானி, தொழில்நுட்ப பிரச்சினை பற்றி பேசியதாக அந்நாட்டின் விமான கட்டுப்பாடு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் 17 குழந்தைகளும் அடங்குவார்கள் எனவும் எகிப்து உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும், முகாந்திரமும் காணப்படவில்லை என எகிப்து பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தகவல் தெரிவித்துள்ளன. விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் சினாய் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், துருக்கி நாட்டின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் அந்நாட்டின் ‘எம்.16’ ரகப்போர் விமானங்கள் ரஷ்ய நாட்டு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த துருக்கி மற்றும் ரஷ்ய அரசின் உயரதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.