Breaking News

நல்லாட்சி அரசின் இரட்டை நிலைசெயற்பாடு - செ.சிறிதரன்

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை நடத்தி
அதில் வெற்றி பெற்ற ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் வெற்­ற­வாதப் போக்கில் ஏதேச்­ச­தி­கா­ரத்தை நோக்­கிய அர­சியல் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­தது.

இந்தப் போக்கு யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நாட்டின் முன்­னேற்­றத்­திற்குப் பாத­க­மா­னது என்­பதை உணர்ந்த எதிர்த்­த­ரப்­பினர் சத்­த­மின்றி, கத்­தி­யின்றி, யுத்­த­மொன்றை நடத்­தினர். ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்து நல்­லாட்­சியை நிறு­வு­வ­தற்­கான அந்த முயற்­சிக்கு நாட்டின் சிறு­பான்மை இன மக்கள் பேரா­த­ரவை வழங்­கினர். 

பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­க­ள­வரும் ஆத­ர­வ­ளித்­தனர். அதன் கார­ண­மாக ஏதேச்­ச­தி­கார ஆட்­சிக்கு முடிவு கட்­டப்­பட்­டது. அதி­கார பலம் அத்­த­னை­யையும் தன்­ன­கத்தே கொண்டு, நாட்டின் சிறு­பான்மை இன மக்­களை இன ரீதி­யா­கவும், மத ரீதி­யா­கவும் அடக்கி ஒடுக்­கி­ய­துடன் நில்­லாமல், வறுமை கார­ண­மாக நலிந்­துள்ள மக்­க­ளையும் நசுக்கி மோச­மான ஒரு சர்­வா­தி­கா­ரி­யாக உரு­மா­ற­வி­ருந்த ஒரு ஜனா­தி­பதி வீட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்டார். 

அவ­ரு­டைய இடத்­திற்கு ஜன­நா­ய­கத்தின் மீது பற்றும், நல்­லாட்­சியின் மீது பிடிப்பும் கொண்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­ற­தொரு புதிய ஜனா­தி­ப­தியை மக்கள் அரி­ய­ணையில் ஏற்­றினர். அர­சியல் அதி­கார பலம் முழுதும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைத்து பாரா­ளு­மன்­றத்­திற்கு நிர்­வாக அதி­கார பலத்தை அதி­க­ரிக்கப் போவ­தாக உறு­தி­ய­ளித்து, ஆட்­சி­ய­மைத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பாரா­ளு­மன்­றத்­திலும் மக்கள் பெரும்­பான்மை பலத்தைப் பொதுத் தேர்­தலின் ஊடாக வழங்­கி­யி­ருக்­கின்­றனர். 

இந்த நிலையில் தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­காரம் விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்­தி­ருக்­கின்­றது. இது நல்­லாட்சி புரி­வ­தாகக் கூறப்­படும் அர­சாங்­கத்­துக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான அர­சியல் உறவைப் பதம் பார்க்­கத்­தக்க வகையில் மோச­ம­டைந்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களை முன்­னைய அர­சாங்கம் இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டித்து, ஐந்து வரு­டங்­களைக் கடந்த நிலை­யிலும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு உத­வி­னார்கள், ஒத்­து­ழைத்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரிலும், குற்­றச்­சாட்­டுக்­களின் பேரிலும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வதில் அக்­க­றை­யற்­றி­ருந்­தது. 

அக்­க­றை­யற்­றி­ருந்­தது என்­ப­தை­விட, அவர்­களை வாழ்நாள் முழுவதும் சிறைச்­சா­லை­க­ளுக்­குள்­ளேயே வைத்­தி­ருக்க வேண்டும் என்ற நோக்­கத்­துடன் செயற்­ப­டு­வதைப் போன்று நடந்து கொண்­டது. ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தமிழ் அர­சியல் கைதிகள் இவ்­வாறு விசா­ர­ணை­யின்­றியும், விடு­த­லை­யின்­றியும், சிறைச்­சா­லை­களில் அடைத்து வைக்கப்பட்டி­ருந்த நிலையில் அர­சாங்­கத்­திடம் தொடர்ச்­சி­யாக அந்தக் கைதிகள் விடு­தலை கோரி­வந்­தார்கள். 

அத்­துடன் வெளி அழுத்­தங்கள் கார­ண­மா­கவும் இந்த எண்­ணிக்கை படிப்­ப­டி­யாகக் குறைந்து இப்­போது இரு­நூ­றுக்கும் மேற்­பட்ட எண்­ணிக்­கையில் வந்து நிற்­கின்­றது. சிறைக்­கை­தி­களும் மனி­தர்­களே என்ற சிந்­த­னையை வெளிப்­ப­டுத்­து­கின்ற வாசகம் கொழும்பு மகசின் சிறைச்­சா­லையின் வெளிச்­சு­வரில் பொறிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வெளியில் உள்­ள­வர்கள் அதனைப் பார்த்துச் செல்­கின்­றார்கள். சில வேளை­களில் பலர் அது­கு­றித்து ஆழ­மாகச் சிந்­திக்­கின்­றார்கள். ஆனால் அந்த வாச­கத்தை அங்கு பொறித்த அர­சாங்­கத்­திற்கும் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கும் அதன் முழு அர்த்­தமும் புரிந்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. 

அந்த வச­னத்தின் உட்­பொ­ருளை அவர்கள் புரிந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், அங்­குள்ள அர­சியல் கைதி­களை அவர்கள் நேரத்­திற்கே விடு­தலை செய்­தி­ருப்­பார்கள். பொது­மன்­னிப்­ப­ளித்து தங்­களை விடு­தலை செய்ய வேண்டும் என்று தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்த வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­யி­ருக்க மாட்­டார்கள். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்கு விருப்­ப­மில்­லாத அதி­கா­ரிகள், 

அவர்­க­ளுக்கு எதி­ராக சரி­யான முறையில் குற்­றங்­களைச் சுமத்த முடி­யா­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றார்கள். இதற்கு இரண்டு சம்­ப­வங்­கள் உதா­ர­ண­மாகக் கூறத்­தக்க வகையில் அமைந்­தி­ருக்­கின்­றன. பருத்­தித்­துறை நாவ­லடி என்ற இடத்தில் 2007 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதலாம் திகதி சுற்றுக் காவல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த இரா­ணு­வத்­தினர் மீது விடு­த­லைப்­பு­லிகள் நடத்­திய கிளேமோர் தாக்­குதல் ஒன்றில் திசா­நா­யக்க என்ற இரா­ணுவ சிப்பாய் ஒருவர் கொல்­லப்­பட்டார். 

இவரைக் கொலை செய்­த­தாக குற்றம் சுமத்தி, பூபால் மாமா என்று அழைக்­கப்­படும் இரத்­தினம் பூபா­ல­பிள்ளை என்­ப­வ­ருக்கு எதி­ராக யாழ். மேல் நீதி­மன்­றத்தில் சட்­டமா அதி­ப­ரினால் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த வழக்கில் எதி­ரி­யா­கிய பூபால் மாமா தானே விரும்பி அளித்த ஒப்­புதல் வாக்­கு­மூலம் மாத்­தி­ரமே சாட்­சி­ய­மாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. சட்­டமா அதி­பரின் கூற்­றுப்­படி 2007 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதலாம் திகதி இந்தச் சம்­பவம் நடை­பெற்­றி­ருந்­தது. 

ஆனால், இந்தக் கொலைச் சம்­ப­வத்தில் குற்றம் சாட்­டப்­பட்­ட­வரை யுத்தம் முடி­வுக்கு வந்த காலப்­ப­கு­தி­யா­கிய 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி ஓமந்­தையில் வைத்து படை­யினர் கைது செய்­தி­ருந்­தனர். இவரை விசா­ரணை செய்­த­தாகக் கூறப்­படும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜகத் பொன்­சேகா தன்­னி­டமே இவர் தனது ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை அளித்­த­தாக நீதி­மன்­றத்தில் சாட்­சி­ய­ம­ளித்தார். எதி­ரி­யா­கிய பூபால் மாமா ஏதோ கூற விரும்­பு­வ­தா­கவும், அவ­ரு­டைய வேண்­டு­கோளை நிறை­வேற்­று­மாறு பயங்­க­ர­வாதத் தடுப்பு பொலிஸ் பிரிவின் பணிப்­பாளர் தனக்கு உத்­த­ர­விட்­ட­தை­ய­டுத்தே தான் அவ­ரிடம் அவ­ரு­டைய ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தைப் பெற்­ற­தாக பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜகத் பொன்­சேகா நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். 

அவ­ரு­டைய சாட்­சி­யத்தை நீதி­மன்­றத்தில் மறுத்­து­ரைத்த எதிரி பூபால் மாமா அந்த பொலிஸ் அதி­கா­ரியைத் தான் காணவே இல்­லை­யென்றும், எவ­ருக்கும் தான் ஒப்­புதல் வாக்­கு­மூலம் அளிக்­க­வில்லை என்றும் நீதி­பதி முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்தார். வழக்கு விசா­ர­ணையின் முடிவில் தீர்ப்­ப­ளித்த யாழ் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், நீதி­மன்­றத்தில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் அளித்த சாட்­சி­யத்தில், அவ­ருக்கு பணிப்­புரை வழங்­கி­ய­தாகக் குறிப்­பிட்ட பயங்­க­ர­வாதத் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் யார்? அவ­ரு­டைய பெயர் என்ன? எதிரி அந்தப் பணிப்­பா­ள­ரிடம் தெரி­விக்க விரும்­பி­யி­ருந்த தகவல் என்ன? எதி­ரியின் விருப்­பத்தை அல்­லது தேவையை அந்தப் பணிப்­பா­ள­ரிடம் கொண்டு சென்­றவர் யார்? என்­பது போன்ற எந்த விட­யமும் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

எதி­ரி­யி­ட­மி­ருந்து பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் சம்­பந்­த­மாக மேற் குறிப்­பிட்ட விட­யங்கள் உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரினால் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை. எதிரி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் அளித்த சாட்­சி­யத்தை மறுத்­து­ரைத்­துள்ளார். எதிரி தனது சாட்­சி­யத்தில் கொலைச் சம்­பவம் நடை­பெற்­ற­போது, தான் வன்­னியில் இருந்­த­தாகத் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் சம்­பவம் நடை­பெற்று இரண்டு வரு­டங்­களின் பின்னர் ஓமந்­தையில் வைத்தே தன்னைக் கைது செய்­த­தா­கவும் எதிரி தெரி­வித்­துள்ளார். 

எதி­ரியின் ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்­த­தாகக் கூறிய உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கரைத் தான் காண­வில்லை என்று கூறி, அந்த ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்­திற்கும் தனக்கும் சம்­பந்தம் இல்லை என்று எதிரி தனது சாட்­சி­யத்தில் கூறி­யுள்ளார். இங்கு அளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்­களில், எதிரி யாரு­டைய தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார், சட்­ட­ரீ­தி­யான தடுப்­புக்­கா­வ­லிலா அல்­லது முர­ணான தடுப்­புக்­கா­வ­லிலா என்­பது தொடர்­பி­லான எதி­ரியின் தடுப்­புக்­காவல் உத்­த­ரவுப் பத்­திரம் எதுவும் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. 

எனவே, எதிரி சுதந்­தி­ர­மாக, சுய­வி­ருப்­பத்தின் பேரில்தான் தனது குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை வழங்­கினார் என்­பதை நிரூ­பிப்­ப­தற்கு அரச தரப்பு தவ­றி­விட்­டது. அதனால், எதிரி அளித்­த­தாகக் கூறப்­ப­டு­கின்ற குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை நீதி­பதி நிரா­க­ரிப்­ப­தாகக் கூறியிருந்தார். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்ற ஒருவர் ஒரு சம்­ப­வத்தைப் பற்றி பொலி­ஸா­ருக்கு அல்­லது அவரை விசா­ரணை செய்­கின்ற அதி­கா­ரிக்குத் தெரி­விக்­கின்ற தக­வல்­க­ளையே அவ­ருக்கு எதி­ரான சாட்­சி­ய­மாகப் பயன்­ப­டுத்தி அவற்றை நிரூ­பித்து அவரைக் குற்­ற­வா­ளி­யாக்கி தண்­டனை விதிக்­கின்ற நடை­முறை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது, 

ஒப்­புதல் வாக்­கு­மூலம் என்­பது சுய­வி­ருப்­பத்­தின்­பேரில், சுதந்­தி­ர­மா­கவும், எவ­ரு­டைய வற்­பு­றுத்­த­லு­மின்றி வழங்­கப்­பட வேண்­டிய ஒன்­றாகும் என்று சட்டம் குறிப்­பி­டு­கின்­றது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் படை­யி­னரால் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­ப­டு­கின்ற ஒருவர் சுய­மாக, சுதந்­தி­ர­மாக சாட்­சி­ய­ம­ளிக்­கத்­தக்க வகை­யி­லான சூழலில் இருப்பார் என்று எதிர்­பார்க்­கவே முடி­யாது. ஏனெனில் படை­யினர் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் மற்றும் அவ­ச­ர­காலச் சட்டம் என்­ப­வற்றின் கீழ் தமக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதீத அதி­கா­ரங்­களை நியா­ய­மான முறையில் நேர்­மை­யாகப் பயன்­ப­டுத்­தி­னார்கள் என்று கூறு­வ­தற்­கில்லை. 

விடு­த­லைப்­பு­லி­க­ளையும் அவர்­க­ளு­டைய ஆத­ர­வா­ளர்­க­ளையும் எதி­ரி­க­ளா­க நோக்­கு­கின்ற போக்கே படைத்­த­ரப்­பி­ன­ரிடம் மேலோங்­கி­யி­ருக்­கின்­றது. படை­யினர் மாத்­தி­ர­மல்ல பொது­மக்­க­ளி­டை­யேயும், அதி­கா­ரிகள் நீதி விசா­ர­ணை­யா­ளர்­க­ளி­டமும் இதே மனப்­பாங்கே காணப்­ப­டு­கின்­றது. சிங்­க­ள­வர்­க­ளா­கிய அவர்கள் எங்கள் படை­யினர் என்றே இரா­ணு­வத்­தி­னரைக் குறிப்­பி­டு­கின்­றார்கள். இந்த நிலையில் பருத்­தித்­துறை நாவ­லடி கிளேமோர் கண்­ணி­வெடி தாக்­கு­தலில் இரா­ணுவ வீரர் ஒருவர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தில், சம்­பவம் நடை­பெற்ற நேரத்தில் வன்­னிப்­பி­ர­தே­சத்­துடன் எந்­த­வி­த­மான தொடர்­பு­மற்ற நிலையில் வன்­னியில் இருந்த ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவ­ருக்கு எதி­ராகக் கொலைக்­குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. 

இதே­போன்று மற்­று­மொரு வழக்­கிலும் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் விசித்­தி­ர­மாக கையா­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை சட்­டத்­த­ரணி தவ­ராசா வெளிக்­கொ­ணர்ந்­துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு கருணா அணியைச் சேர்ந்த நான்கு பேரைக் கொலை செய்­வ­தற்­காக விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு உதவி புரிந்­த­தாகக் குற்றம் சுமத்தி கணே­ச­ரட்னம் சாந்­த­தேவன், முரு­கையா கோமகன் என்ற இரு­வ­ருக்கு எதி­ராகக் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை சான்­றாகக் கொண்டு இரண்டு வழக்­குகள் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. 

இந்த வழக்­கு­களில் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை உரிய சாட்­சி­ய­மாக ஏற்க முடி­யாது என மேல் நீதி­மன்ற நீதி­பதி வி..சந்­தி­ர­மணி கூறி, எதி­ரிகள் இரு­வ­ரையும் அந்தக் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து விடு­தலை செய்­தி­ருந்தார். ஆனால், இந்த எதி­ரிகள் இரு­வ­ருக்கும் எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில் அதே குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் நிரா­ரிக்­கப்­பட்ட அதே ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில் வழக்கைத் தொடர்ந்து விசா­ரணை செய்­யு­மாறு சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்கி வழி­காட்­டி­யி­ருந்­தது. 

இந்த முரண்­பட்ட நிலை­மையைச் சுட்­டிக்­காட்­டிய சட்­டத்­த­ரணி தவ­ராசா, வடக்­கிற்கு ஒரு சட்­டமா அதி­பரும், தெற்­கிற்கு மற்­று­மொரு சட்­டமா அதி­ப­ருமா செயற்­ப­டு­கின்­றார்கள். ஒரு நாட்­டிற்குள் ஏன் இந்த நிலைமை என நீதி­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் நிரா­க­ரிக்­கப்­பட்­டதை வவு­னியா மேல் நீதி­மன்றம் எழுத்து மூல­மாக சட்­டமா அதி­ப­ருக்கு அறி­வித்­தி­ருந்த போதிலும், அதனைக் கவ­னத்திற் கொள்­ளாமல் வவு­னி­யாவில் ஒரு வகை­யிலும் கொழும்பில் அதற்கு முரண்­பட்ட வகை­யிலும் சட்­டமா அதிபர் நடந்து கொள்­வது ஏன் என்றும் தவ­ராசா வின­வி­யி­ருந்தார். 

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்தில் சட்­டமா அதிபர் திணைக்­களம் இவ்­வாறு முரண்­பட்ட வகையில் நடந்து கொள்­வது ஒரு­பு­ற­மி­ருக்க, கைது செய்­யப்­ப­டு­கின்ற தமிழ் அர­சியல் கைதிகள் மீது ஏதோ சாட்­டுக்­காக எதை­யா­வது தெரி­வித்து, அவர்கள் குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் வழங்­கி­னார்கள் என்று சாட்சி­யத்தைத் தயார் செய்து நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­கின்ற போக்கே காணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூல சாட்­சி­யத்தைத் தயார் செய்­வ­தற்­காக நீண்ட காலத்தை அவ­கா­ச­மாகப் படை­யி­னரும் பொலி­ஸாரும் எடுத்துக் கொள்­கின்­றார்கள். 

இதன் கார­ண­மா­கவே, யுத்தம் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டு­க­ளுக்கு மேலா­கி­விட்ட போதிலும், அர­சியல் கைதி­களின் பிரச்­சினை தொடர்ந்து இழு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. தமிழ் அர­சியல் கைதிகள் பொது­மன்­னிப்பின் கீழ் விடு­தலை கோரி, உண்ணா விரதப் போராட்­டத்தை நடத்­தி­ய­தை­ய­டுத்து நவம்பர் 7 ஆம் திக­திக்­கி­டையில் பிரச்­சி­னைக்கு முடிவு காணப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­தை­ய­டுத்து பிர­தமர் நவம்பர் 9 ஆம் திகதி 31 அர­சியல் கைதிகள் பிணையில் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்று திகதி குறிப்­பிட்டு அறி­வித்­தி­ருந்தார். 

நாட்டின் அதி­யுயர் தலை­வர்­க­ளா­கிய இரு­வ­ரு­டைய வாக்­கு­று­தி­களும் உரிய முறையில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. நவம்பர் 9 ஆம் திகதி சிறைச்­சா­லை­களில் இருந்து பிணை­வி­டு­த­லையை எதிர்­நோக்கி, நீதி­மன்­றத்­திற்குச் சென்ற கைதி­க­ளுக்குப் பிணை வழங்­கப்­ப­ட­வில்லை. சட்­டத்­த­ர­ணிகள் பிணை விண்­ணப்பம் செய்­த­போது அதற்­கு­ரிய பரிந்­துரை சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து நீதி­மன்­றத்­திற்கு கிடைக்­க­வில்லை என தெரி­வித்து நீதி­பதி வழக்கை 24 ஆம் திக­திக்கு தவ­ணை­யிட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து அந்தக் கைதிகள் மீண்டும் சிறைச்­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார்கள். 

அவர்­க­ளுக்குப் பின்­னா­லேயே பிணை வழங்­கப்­ப­டு­ப­வர்­களின் பெயர்ப்­பட்­டியல் ஒன்று சிறைச்சாலை ஆணை­யா­ள­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து காலையில் பிணை மறுக்­கப்­பட்டு தவ­ணை­யி­டப்­பட்ட வழக்­குகள் தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் சுமார் 3, 4 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் உரிய ஆவ­ணங்­களைத் தயார் செய்து பிணை விண்­ணப்­பத்தை நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­த­தை­ய­டுத்து, அவர்­க­ளுக்கு நீதி­மன்றம் பிணை வழங்­கி­யது. 

இரண்டு வரு­டங்கள் தொடக்கம் பத்து பதி­னைந்து வரு­டங்­க­ளாக சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்­கு­வ­தற்கு அல்­லது அவர்­களை விடு­தலை செய்­வ­தற்­கு­ரிய ஆவ­ணங்­களைத் தயார் செய்ய முடி­யா­தி­ருந்த சட்­டமா அதிபர் திணைக்­களம் இந்த 30 பேரு­டைய விட­யத்தில் மாத்­திரம் எவ்­வாறு 3, 4 மணித்­தி­யா­லங்­களில் தேவை­யான ஆவ­ணங்­களைத் தயார் செய்ய முடிந்­தது என்ற கேள்வி இங்கு இயல்­பா­கவே எழு­கின்­றது. 

சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது, ஒரு விட­யத்தை மிகத் துல்­லி­ய­மாக எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. மன­முண்­டானால் இட­முண்டு என்ற பொன்­மொ­ழியின் உண்மைத் தன்­மையை இந்த நட­வ­டிக்கை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. எனவே தமிழ் அர­சியல் கைதி­களின் விட­யத்தில் சட்­டமா அதிபர் திணைக்­க­ள­மும்­சரி, அர­சாங்­கமும் சரி மனம் வைத்துச் செயற்­பட்டால், அவர்­க­ளுக்குப் பொது­மன்­னிப்பு வழங்க முடியும். அதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் கிடை­யாது. 

வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தலை­மையில் வட­மா­காண அமைச்­சர்கள் நான்கு பேரையும் சந்­தித்த ஜனா­தி­பதி மைத்திரி­பால சிறி­சேன, தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வதைத் தான் எதிர்க்­க­வில்லை என்­பதைத் தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்றார். ஆனாலும், அவர் மற்­று­மொரு விட­யத்­தையும் அவர்­க­ளிடம் அழுத்­த­மாக சுட்­டிக்­காட்­டியி­ருக்­கின்றார். 

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்தால், விடு­த­லைப்­பு­லி­களை இந்த அர­சாங்கம் விடு­தலை செய்­து­விட்­டது என்று நாட்டின் தென்­ப­கு­தியில் உள்­ள­ சிங்­கள மக்கள் மத்­தியில் பிர­சாரம் செய்து, பத­வி­யேற்று இரண்டு மாதங்­களே ஆகின்ற புதிய அர­சாங்­கத்தை பத­வியில் இருந்து நீக்­கி­வி­டு­வ­தற்கு சிலர் தயா­ராக இருக்­கின்­றார்கள் என அவர் கூறி­யி­ருக்­கின்றார். 

தமிழ் அர­சியல் கைதிகள் சட்­டத்­திற்கு அமை­வாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­களா அல்­லது சட்­டத்­திற்கு விரோ­த­மாக அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­களா என்று ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு அப்பால், அர­சியல் ரீதி­யாக அவர்­களை விடு­தலை செய்வது குறித்து சிந்திக்கின்ற நிலைமையிலேயே இந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

விடுதலைப்புலிகள் அமைப்பில் முழு நேர உறுப்பினர்களாக இருந்து ஆயுதப் பயிற்சி மற்றும் அரசியல் செயற்பாட்டுப் பயிற்சி என அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்குரிய பலவகையான பயிற்சிகளைப் பெற்று போர்க்களத்தில் நேருக்கு நேர் நின்று சண்டையிட்டவர்கள் உட்பட 11 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களை அரசாங்கம் புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் விடுதலை செய்திருக்கின்றது. 

அத்தகைய விடுதலைப்புலிகள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகையில், சிறைச்சாலைகளில் அவர்களுக்கு உதவி புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி சந்தேக நபர்களை விடுதலை செய்வதன் மூலம் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய அச்சம் அர்த்தமற்றதாகும். அது ஓர் அரசியல் ரீதியான சாட்டாகுமே தவிர வேறு ஒன்றுமில்லை. 

விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்பதற்காக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஏதோ ஒரு அரசியல் தேவைக்காக, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவே அரசாங்கம் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய மறுத்து வருகின்றது என்றே எண்ண வேண்டியிருக்கின்றது. அந்த வகையிலேயே முரண்பட்ட வகையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களமும், அரசாங்கமும் கையாண்டு வருகின்றன. 

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதை முன்னிலைச் செயற்பாடாகக் கொண்டுள்ள புதிய அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் சட்ட ரீதியாக நடந்து கொள்வதாக வெளியில் காட்டிக்கொண்டு உள்ளூர் அரசியல் ரீதியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலைச் செயற்பாடு அல்லது மூடுமந்திரச் செயற்பாடானது தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக அரசியல் ரீதியாகத் துருவப்படுவதற்கே வழி வகுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.