Breaking News

யுத்தக் குற்றத்திற்கு தண்டனை விதிப்பதால் பிரச்சினை தீர்க்கப்படாது : திஸ்ஸ அத்தநாயக்க

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் தண்டனை வழங்குவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடாந்து குறிப்பிட்ட அவர், இலங்கையில், 30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்றதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் அனைத்து செயற்பாடுகளும் சட்ட ரீதியாக நடைபெற்றிருக்காது என்றும் கூறினார்.

இந்த யுத்தத்தின் காரணமாக இராணுவத்திற்கோ, ஆட்சியாளர்களுக்கோ, அல்லது போர் செய்தவர்களுக்கோ தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டினைப் பொருத்தவரையில் இது ஒரு பல்லின நாடு என்றும், இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிமம் என்று பேதமில்லை எனவும், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

யுத்தம் நிறைவடைந்து இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், மீளவும் இதயங்களில் குரோதம் ஏற்படாத வகையில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பக் கூடிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக் கொண்டார்.