‘போர்க்குற்றச்சாட்டுகள் முதல் அவன்கார்ட் வரை’ – பொன்சேகாவின் நேர்காணல்
இறுதி போரில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக வெளியிட்டப்படும் சில காணொளிகளை ஏற்க முடியாது, ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம், அதுபற்றி முறையான விசாரணைகளை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவரது அந்தச் நேர்காணல்-
கேள்வி:- அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. உண்மையில் இதில் ஊழல் நடந்துள்ளதாக கருதுகின்றீர்களா?
பதில்:- ஆம், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை. அதாவது காலி துறைமுகத்தில் அவன்கார்ட் நிறுவனத்தின் ஆயுதக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தவறானதாகும். அது மட்டுமில்லாது கொழும்பில் ஆயுதக் கப்பல் ஒன்றும் இருந்தது. இதில் அனுமதிப்பத்திரம் இல்லாத ஆயுதங்களே இருந்தன.அதேபோல் ஆயுத கப்பல் கடல் எல்லையில் இருப்பது அனைத்துலக சமுத்திரவியல் பாதுகாப்பு சட்டதிட்டத்துக்கு அமைய மிகப்பெரிய தவறாகும். இந்த சட்டதிட்டத்தின் கீழ் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது.
ஆகவே, அனைத்துலக சட்டதிட்டங்களை மீறி இவ்வாறு அனுமதிப்பத்திரம் இல்லாத ஆயுதங்களை வைத்திருக்க யார் அனுமதி கொடுத்தது. அனைத்துலக சட்டங்களை எமது நாடும் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது. அவ்வாறு இருக்கையில் அனைத்துலக சமுத்திரவியல் சட்டங்களை மீறும் வகையில் அனுமதி கொடுக்கக் கூடிய நபர் யாரும் இங்கு இருந்தார்களா? பாதுகாப்பு அமைச்சில் இருந்தனரா? எப்படி இவ்வாறு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டது? அவ்வாறு யாரேனும் இருந்தால் இது எந்த சட்டத்தின் கீழ் தவறில்லை என்பதை தெரிவிக்கும்படி அவரிடமே வினவவேண்டும்.
கேள்வி:- அவன்கார்ட் நிறுவனம் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் அதிகாரத்தின் கீழ் செயற்பட்டதா?
பதில்:- ஆம், இந்த நிறுவனம் கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் தான் செயற்பட்டது. அதேபோல் ரக்ன லங்கா நிறுவனத்துடன் இந்த ஆயுத கொள்வனவு தொடர்பில் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. அவ்வாறு செய்துகொண்ட உடன்படிக்கையில் இந்த ஆயுத பரிமாற்றம் அல்லது ஆயுத கப்பல் கொண்ட கடல் பாதுகாப்பை மேற்கொள்ள முடியும். அவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை ரக்னா லங்கா நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எவன்காட் மூலம் ஒரு சட்டம் கொண்டுவர அவர்களுக்கு அனுமதி இருந்ததா? அது சட்டவிரோத உடன்படிக்கை இல்லையா? இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன.
ஆகவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனம் என்ற காரணத்தினால் தான் இவ்வாறு தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்தனர். ஆனால் பாதுகாப்பு அமைச்சின்கீழ் உள்ள நிறுவனம் என்பதற்காக நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறி எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ள அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பாதுகாப்பு செயலாளருக்கு கூட அவ்வாறு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்க அதிகாரம் இல்லை. ஆகவே அவன்கார்ட் விடயத்தில் மிகக் கீழ்மட்டமான ஒரு துஷ்பிரயோகம் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதை மூடிமறைத்து குற்றவாளிகளை காப்பாற்ற பல தரப்பினர் பொய்யான ஒரு வாதத்தினை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். ஆகவே இந்த விடயத்தில் உண்மைகளை கண்டறிய வேண்டும்.
கேள்வி:- அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் ஆரம்பத்தில் அதிகம் கதைத்தவர்கள் இன்று வாய்மூடி உள்ளனரே? குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து வருகின்றனரே?
பதில்:- இந்த மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கத்தில் முக்கிய ஒருசிலர் முயற்சிக்கின்றனர். குறிப்பகாக அவன்கார்ட் மோசடியில் சம்பந்தப்பட்ட நபர்களை காப்பாற்றுவது தற்போதைய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவே என்பதை நான் வெளிப்படையாகக் கூறுகின்றேன். அவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டாம் என அவருக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றும் நான் இதை குறிப்பிட்டேன். எவன்காடின் பின்னணியின் இவரே உள்ளார். அவர்களுக்கு விசுவாசமாக இருந்து அவர்களை பாதுகாக்கின்றார். அந்த உண்மைகள் எமக்குத் தெரியும். ஆனால் நீதிமன்றத்தில் எம்மால் அதை நிரூபிக்க முடியவில்லை. அரசாங்கத்தின் குறித்த ஒரு சிலர் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளனர்.
கேள்வி:- அப்படியாயின் அதிபர், பிரதமருடன் இந்த விடயங்கள் தொடர்பில் ஏன் கலந்துரையாடவில்லை?
பதில்:- இந்த அரசாங்கத்தில் அனைத்து விடயங்களுக்கும் அதிபர் மற்றும் பிரதமருடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சியில் அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் எனக்கு விஜேதாச தொடர்பில் நன்றாகவே தெரியும். அவன்கார்ட் நிறுவனத்திடம் பணம் பெற்று அவர்களை காப்பாற்ற முயற்சிப்பது தான் உண்மை. அதேபோல் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளார். திலக் மாரப்பன தொடர்பிலும் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் இப்போது அவரது நடவடிக்கைகளிலும் சந்தேகம் உள்ளது.
கேள்வி:- எனினும் கடற்படையினால் எல்லை பாதுகாப்பை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அதன் காரணமாகவே அவன்கார்ட் நிறுவனத்திற்கு இந்த பொறுப்பை கொடுத்ததாகவும் கூறுகின்றனரே?
பதில்:- இதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கடற்படைக்கு முடியாத காரணம் என்று என்னால் கூற முடியாது. அனைத்து பயிற்சிகளும், ஆயுத பலமும் எமது கடற்படைக்கு உள்ளது. ஆனால் இந்த அவன்கார்ட் நிறுவனத்தில் உள்ளவர்களில் அதிகளவான நபர்களுக்கு கடலில் கால்வைக்கவே அஞ்சுவார்கள் என்று நான் நினைக்கின்றேன். இவ்வாறான கதைகளைக் கூறி எம்மையும் சட்டத்தையும் ஏமாற்றப் பார்க்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே கடற்படையினர் தானே இந்த சேவையை செய்து வந்தனர். இப்போது மட்டும் என்ன குறை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இவ்வாறு கடலில் ஆயுத கப்பல் இருப்பதாயின் அது கடல் எல்லையில் இருந்து 12 கிலோ மீற்றர் எல்லைக்கு அப்பால் தான் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்குமாயின் கப்பல் எந்த வேளையிலும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் அவன்கார்ட் சாதாரண கப்பலையே பயன்படுத்தியது. அந்தக் கப்பலினால் இவ்வாறு கடல் எல்லைக்கு அப்பால் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்க முடியாது. அதேபோல் இந்த கப்பலுக்கு தேவையான மின் பாவனையை கூட கரையில் இருந்துதான் பெற்றுள்ளனர். ஆகவே அவ்வாறான ஒரு கப்பலின் மூலம் எவ்வாறு எல்லையை பாதுகாக்க முடியும்.
கேள்வி:- இந்த அவன்கார்ட் நிறுவனத்தின் மூலமாக வெளிநாட்டவர்களுக்கும் ஆயுத பயிற்சி வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பில் உங்களுக்கு தெரியுமா?
பதில்:- ஆம், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையே. சிறிலங்காயின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நாட்டின் சட்டதிட்டங்களை மீறி இவ்வாறு வெளிநாட்டவர்களை எமது நாட்டினுள் பயிற்றுவிக்க எந்த அதிகாரமும் இல்லை. இவர்கள் யார், அல்-கைதா பயங்கரவாதிகளா அல்லது ஐ.எஸ் பயங்கரவாதிகளா, எங்கிருந்து வருகின்றனர், பயிற்சியை முடித்துவிட்டு எங்கு செல்கின்றனர் என்பது தொடர்பில் எந்தவித அறிவித்தலும் இல்லை. ஆகவே இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலான விடயங்களேயாகும்.
கேள்வி:- பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு எவ்வாறானது?
பதில்:- யுத்த காலகட்டத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகள் மற்றும் உண்மையில் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் என இரு சாராரும் கலந்தே இன்று கைதிகள் என்ற பொதுவான வரையறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் யார் புலிகளுடன் தொடர்புபட்டவர், யார் நிரபராதி என எமக்கு எதுவும் தெரியாது. எனினும் தண்டனைகளை அனுபவிக்கும் குற்றவாளிகள் விடுதலையாக இந்த நாட்டில் இடம் உள்ளது. சிறிலங்காயில் சட்டதிட்டங்களுக்கு அமையவும் அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி நாட்டின் சட்டத்திற்கு அமைய குற்றம் சுமத்தப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க அதிபர்க்கு அதிகாரம் உள்ளது. அவர் தீர்மானித்தால் யாராலும் அதை தடுக்க முடியாது. ஆகவே அதிபர் மனது வைத்தால் இப்போது தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படலாம்.
கேள்வி:- எனினும் இந்த கைதிகளை விடுதலை செய்வது நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க வாய்ப்பாக அமையும் என்ற கருத்தை ஒருசாரார் முன்வைக்கின்றனர், இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- ஒரு சிலரின் அரசியல் சுயநலத்தை பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கூறிக்கொண்டு நாட்டில் மீண்டும் ஒரு இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கப் பார்க்கின்றனர்.
கேள்வி:- நீங்களும் ஒரு கட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தீர்கள், இன்றும் அந்த வடுக்கள் மனதில் உள்ளதா?
பதில்:- யுத்தத்தை வெற்றிகொண்ட நானும் ஒரு காலகட்டம் வரை தேசத்துரோகி என்ற பெயரில் சிறையில் தான் இருந்தேன். எனது உயிரையும் எமது இராணுவ வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து போராடிய நிலையிலும் தனிப்பட்ட ரீதியில் நான் பழிவாங்கப்பட்டேன். இந்த நாட்டை மீட்டு நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே எம் மத்தியில் இருந்தது. ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்டவுடன் அந்த வெற்றி யாரால் வந்தது என்பதை மகிந்த மறந்துவிட்டார். ஒருசில காரணங்களை மனதில் வைத்துக்கொண்டு என்னை பழிவாங்கிவிட்டார். அந்த துரோகச் செயல் இன்றும் எனது மனதில் ஆறாது உள்ளது.
கேள்வி:- வெள்ளைக்கொடி விவகாரம் தொடர் பில் உங்களை குற்றம் சுமத்துகின்றனர். இதை நீங்கள் பொறுப்பேற்கின்றீர்களா?
பதில்:- இல்லை, யுத்த காலகட்டத்தில் நான் தளபதியாக இருந்தாலும், இறுதி நேரத்தில் நான் சிறிலங்காவில் இருக்கவில்லை. அதேபோல் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பங்களில் நாம் களத்தில் தனித்து முடிவுகளை எடுக்க முடியாது போன பல சந்தர்ப்பங்கள் உள்ளன. பாதுகாப்பு தலைமைகள் எமது கட்டளைகளையும் தாண்டிய சுயாதீன தீர்மானங்களை எடுத்தன. அவ்வாறான ஒரு சம்பவமே இந்த வெள்ளைக்கொடி விவகாரமாகும். அதேபோல் இந்த சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் நான் சிறிலங்காயில் இருக்கவில்லை.
கேள்வி;- இறுதிப் போரில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:- இறுதிப் போரில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டு அவை தொடர்பில் வெளியிட்டு வரும் ஒருசில காணொளிகள் தொடர்பில் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருக்க முடியும். அவை தொடர்பில் சரியான விசாரணைகளை மேற்கொண்டு அவற்றின் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும். அதற்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராகவே உள்ளேன்.
கேள்வி:- அப்படியாயின் சிறிலங்கா இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?
பதில் :- ஆம், இந்த விடயத்தில் கட்டாயமான விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும். அவ்வாறு விசாரணைகளை மேற்கொண்டால் தான் எமது இராணுவம் மனிதாபிமான செயலை செய்தது என்ற உண்மை வெளிப்படும். அவ்வாறு இல்லாது மகிந்த செய்ததைப்போல் எந்தவித ஒத்துழைப்பும் வழங்காது ஒளிந்து திரிந்தால் அனைத்துலகத்தின் மத்தியில் நாம் குற்றவாளிகள் என்ற கருத்து மட்டுமே போய்ச்சேரும். அதேபோல் விசாரணைகள் விடயத்தில் இந்த அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்தி உண்மைகளை கண்டறிய முயற்சிப்பது நல்லதொரு விடயமாகும். அவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கும் போது எமது ஒத்துழைப்புகளையும் வழங்க நான் தயாராகவே உள்ளேன். மேலும் இந்த விசாரணை முழுமையாக வெற்றிகரமாக நடைபெற்றால் அதன் பின்னணியில் முக்கிய குற்றவாளிகள் சிலர் அகப்படுவார்கள்.
கேள்வி:- போரின் போது உங்களின் கட்டுப்பாட்டில் தான் இராணுவம் செயற்பட்டது. அப்படியாயின் நீங்களும் முக்கிய நபராக இருக்கின்றீர்கள், இப்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நீங்களும் பொறுப்பாளியாக வேண்டும் தானே?
பதில்:- நான் ஆரம்பத்தில் இதை கூறியுள்ளேன், அதாவது நான் தளபதியாக இருந்தாலும் அதிகாரங்களை என்னால் சரியாக முன்னெடுக்க முடியவில்லை. குறிப்பாக மகிந்த ராஜபக்ச போரை எப்படியேனும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டில் மட்டுமே இருந்தார். போர் யுக்திகளை பற்றி அவர் கவலைப்படவில்லை. அதேபோல் விரைவில் முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு மட்டுமே அவரிடம் இருந்தது. ஆனால் அந்த அழுத்தத்தின் மத்தியிலும் நான் மிகச் சரியாக எனது நகர்வுகளை முன்னெடுத்தேன். அந்த நம்பிக்கையில் தான் விசாரணைகளையும் நான் ஆதரிக்கின்றேன்.
கேள்வி :- போரில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று கூறுகின்றீர்களா?
பதில்:- ஆம், இந்த குற்றச்சாட்டை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இறுதி போரில் பொதுமக்களை காப்பாற்றி அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல நாம் அதிக அக்கறை காட்டினோம். அதேபோல் பொதுமக்கள் வாழும் பகுதிகளை எம்மால் இலகுவில் இனங்காண முடிந்தது. அதனால் நாங்கள் அவர்களை பாதுகாத்தே யுத்தத்தை முன்னெடுத்தோம். அதேபோல் போரின் போது இவ்வாறு நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆதாரபூர்வ அறிக்கைகள் ஏதும் இல்லை.
கேள்வி:- அதிபர் மாளிகையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது உண்மையில் பதுங்கு குழியா, அது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:- அது பதுங்கு குழி அல்ல. அது இரகசிய மாளிகை. பதுங்குகுழி எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். யுத்தகால கட்டத்தில் களத்தில் இருந்து செயற்பட்டவன் நான். ஆகவே பதுங்குகுழியை எவ்வாறு அமைக்கவேண்டும், அதை பாதுகாப்பாக மாற்றியமைப்பது எவ்வாறு என்ற விடயங்கள் எனக்கு தெரியும். ஆனால் இது அவ்வாறு அல்ல. அதிபர் சுகபோகமாக வாழும் வகையில் சகல வசதிகளுடன் அமைத்துள்ளார். இந்த இரகசியம் வெளிவரும் வரையில் எனக்கு இப்படியான ஒரு மாளிகை தரைக்குக் கீழ் இருந்தமை தெரியாது.
கேள்வி:- எனினும் யுத்த காலகட்டத்தில் இராணுவ திட்டங்கள் அனைத்தும் இந்த மாளிகையில் இருந்தே தீர்மானித்ததாக முன்னாள் அதிபர் மகிந்த தெரிவித்திருக்கிறாரே ?
பதில்:- எனக்கு தெரிந்தவரையில் ஒரு தடவையேனும் இந்த மாளிகையில் இருந்து நாங்கள் உரையாற்றியது இல்லை. ஏதேனும் தீர்மானங்களை எடுப்பதாயின் சில சந்தர்ப்பங்களில் அதிபர் செயலகத்தில் சந்தித்ததுண்டு. அதேபோல் இராணுவ தலைமைக் காரியாலயத்தில் சந்திப்பதுண்டு. ஆனால் நான் அதிபர்யை சந்திக்கும் வாய்ப்புகள் அரிதாகவே இருந்தன. பாதுகாப்பு செயலாளரே என்னுடன் தொடர்புகொண்டு தீர்மானங்களை தெரிவிப்பார்.
கேள்வி:- வடமாகாண சபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அது தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளீர்கள்?
பதில்:- மாகாணசபை அதிகாரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற தேவையோ அல்லது மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் எமது நாட்டைப் பொறுத்தவரையில் அவசியமற்றதாகும்.இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில் அது சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள மாநிலங்களின் ஒரு பகுதி அளவில் தான் எமது நாட்டின் மொத்த பரப்பளவும் உள்ளது. ஆகவே நாம் வாழும் சிறிய நாட்டில் இவ்வாறு அதிகாரங்களை பகிர்ந்து செயற்படவேண்டிய தேவை இல்லை. இது வடக்கு என்பதற்காக கூறவில்லை, நாட்டில் எந்த மாகாணத்திற்கும் இந்த அதிகாரங்கள் அவசியம் இல்லை.