பக்க சார்பற்ற நீதிபதிகளை கொண்டு வந்தே விசாரணை செய்யவேண்டும் : விக்னேஸ்வரன்!
பக்கசார்பற்ற நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டால் தான் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தான் ஜப்பான் நாட்டு தூதுவருக்கு எடுத்து கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவரான கெனிச்சி சுகனுமாவை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நெல்லை களஞ்சியப்படுத்தும் கட்டடம் ஒன்றினை ஜப்பான் நாட்டின் நிதி உதவியில் கிளிநொச்சியில் கட்டுவதாக கூறினார். வடமாகாணம் மீன் பிடி விவசாயம் என்பவற்றை ஒட்டித்தான் எமது கலாச்சாரம் பொருளாதாரம் இருப்பதாக எடுத்து கூறினேன் அதற்கு அவர் விசாயம் மீன் பிடி தொடர்பான ஆராய்ச்சிகள் செய்வதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் எம்முடன் கலந்தாலோசிக்காமல் திட்டங்களை மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்து நடைமுறைப்படுத்துகின்றார்கள். பின்னர் ஒரு திகதியில் அதனை ஆரம்பித்து வைக்குமாறு எம்மை அழைக்கின்றார்கள் நாமும் சென்று எதுவும் அறியாது ஆரம்பித்து வைக்கின்றோம் இவ்வாறன செயற்திட்டங்களை எம்முடன் கலந்தாலோசித்து வடக்கு மக்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்து எங்களையும் சேர்த்து கலந்துரையாட வேண்டும் என கோரி இருந்தேன்.
அது மத்திய மாகாணத்துடன் நீங்கள் பேசுங்கள் என கூறினார். சமாதானம் நல்லிணக்கம் பொருளாதார விருத்தி என்பது பற்றியும் கலந்துரையாடினோம் அதில் நான் நல்லிணக்கம் சம்பந்தமாக அவருக்கு கூறியது என்னவெனில் நல்லெண்ணத்தை வெளியில் இருந்து வந்து கொண்டுவந்து திணிக்க முடியாது. சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு கஷ்டப்படுகின்றது.பத்தாயிரம் பேரை விடுவித்த போது எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை.
ஜே.வி.யில் அத்தனை பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தடங்கல் தாமதம் ஏற்படுவது எமக்கு வியப்பாக இருக்கின்றது. இவ்வாறன சிறுவிடயங்களில் விட்டுக்கொடுப்பு இருந்தாலே நல்லிணக்கத்திற்கு பயன் கிடைக்குமே தவிர , இவற்றை செய்யாது நல்லிணக்கம் நல்லிணக்கம் என பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என கூறினேன்.
உள்ளக விசாரணையால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நன்மை கிடக்கும் என அவர் கூறினார். அதற்கு நான் கூறினேன் அவ்வாறு நான் நினைக்கவில்லை என , அதற்கு காரணம் இந்த சட்டங்களை எவ்வாறு எமது நாட்டுக்கு ஏற்புடையாதாக கொண்டு வரபோகின்றோம் என்பது ஒரு பிரச்சனை. சென்ற காலத்தில் ஏற்பட்ட கலவரங்களில் பிழை செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை, ஒரு நீதிமன்றத்தால் அவர்கள் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டாலும் மேல் முறையீடு மூலம் விடுதலை ஆகின்றார்கள்.
இப்படியான நிலையில் நாங்கள் யாரை வழக்கு தொடுநராக வைத்து இருக்க போகின்றோம் என்பது ஒரு கருத்து, என கூறினேன். அப்போது அவர் கேட்டார் உங்கள் நாட்டில் தமிழ் நீதிபதிகள் இல்லையா என , தமிழ் நீதிபதிகள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சரியான தீர்மானத்திற்கு வர முடியாது உள்ளது. அவர்களுக்கு பயம் பிடிக்கின்றது. நாங்கள் ஏதேனும் கூறி பின்விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுமோ என்ற கருத்து சிறுபான்மை நீதிபதிகளிடம் உண்டு என கூறினேன்.
பக்க சார்பற்ற நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டு வந்தால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்கலாம் என்று அவர்களுக்கு நீதியை பெற்று கொடுக்காவிடின் அவர்களின் மனதில் எந்த காலத்திலும் சுமூகமான சூழலை ஏற்படுத்தாது என தான் கூறியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.