இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது - சொல்கிறார் விஷால்
காவிரி, இலங்கைத் தமிழர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எனது தனிப்பட்ட முறையில் ஆதரவு உண்டு. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தமாட்டோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற பதவியும் வந்திருக்கிறது. நடிகராகவும், சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பணிகளை செய்யவேண்டிய கடமையில் இருக்கிறேன். பொறுப்புக்கள் அதிகமாகியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களாக என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் நல்லது செய்யவே, நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வரமாட்டேன், தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். காவிரி பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிடாது என்று நீங்கள் சொன்னதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதே என்று கேட்டதற்கு.
எனது வீட்டுக்கு முன் போராட்டம் நடத்தியுள்ளனர். பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. போராடுபவர்கள் முதலில் ஏழைப்பிள்ளைகளை படிக்க வையுங்கள். காவிரி, இலங்கைத் தமிழர் உள்ளிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பது அரசு செய்யவேண்டிய வேலை. அதற்கான போராட்டங்களில் நடிகர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நடிகர் சங்கம் கலந்துகொள்ளாது. அரசு சார்ந்த விஷயங்களில் நடிகர் சங்கம் பங்கேற்காது. நானும் தமிழன்தான், தமிழ் குடிமகன்தான். சென்னையில்தான் பிறந்தேன். காவிரிப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவேண்டும் என்பது என் ஆசை எனத் தெரிவித்துள்ளார்.