வலி. வடக்கில் சில பிரதேசங்கள் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிப்பு
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தில் 620 ஏக்கர் காணி ஆட்சிமாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலதிகமாக 18.04 ஏக்கர் காணி நேற்றைய தினம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு தொடக்கத்தில் ஆட்சி மாற்றம் உருவாக்கப்பட்டதன் பின்னர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 620 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
எனினும் பொதுமக்களுக்குச் சொந்தமான குடியிருப்பு காணிகள் மற்றும் பாடசாலைகள், ஆலயங்கள், மற்றும் வீதிகள் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் படையினரின் பயன்பாட்டில் இருந்துவருவது தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்தனர்.
இந்நிலையில் முக்கியமாக மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்படவேண்டும். என கோரிக்கை விடுத்த பகுதிகளிலிருந்து 18.04 ஏக்கர் காணி நேற்றைய தினம் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக தெல்லிப்பளை பிரதேச செயலர் க.சிறீமோகனனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, படையினர் ஒப்புதலுடன் 18.04ஏக்கர் பொதுமக்களுடைய காணி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒட்டகப்புலம் றோ.க.வித்தியாசாலை, சாந்தை சந்தி- வறுத்தலை விளான் இணைப்பு வீதி ஆகியனவும் விடவிக்கப்பட்டிருக்கின்றது.தற்போது பிரதேச செயலகம் ஊடாக விடுவிக்கப்பட்ட பகுதியை துப்புரவு செய்யும் பணியை முன்னெடுத்திருக்கின்றோம்.
இதன்படி சாந்தை சந்தி 1.81 ஏக்கர் காணி வறுத்தலை விளான் (வீட்டுத்திட்டம்) 11.01 ஏக்கர் காணி, ஒட்டகப்புலம் றோ.க.வி த்தியாசாலை 1.05 ஏக்கர் காணி, வசாவிளான் கிழக்கு ஜே.244 பகுதியில் 3.63 ஏக்கர் காணி உள்ளடங்கலாக மொத்தம் 18.04 ஏக்கர் காணி, நேற்றைய தினம் படையினரின் ஒத்துழைப்புடன் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்க ப்பட்டிருக்கின்றது.
மக்கள் தங்களுடைய காணிகளை பார்வையிடலாம். எனினும் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டிருக்கும் காணிகளுக்கு மேலதிகமாக 2 ஏக்கர் வரையிலான காணிகள் மேலும் சில காணிகளும் ஆங்காங்கே, விடுவிக்கப்பட்டிருக்கின்றன.இந்நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கும் காணிகளில் எத்தனை குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் திரட்டப்படவில்லை.
எனினும் அவை முழுமையாக திரட்டப்பட்டு மீள்குடியேறும் மக்களுக்கான அடிப்படை தேவைகள் நிறைவு செய்து கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.