Breaking News

பிணை வழங்குவது அரசியல்வாதிகளின் வாக்குறுதியாம் – கைவிரித்தது சட்டமா அதிபர் திணைக்களம்

அரசியல் கைதிகளில் 32 பேரை முதற்கட்டமாக பிணையில் விடுவிப்பதாக அரசியல்வாதிகளே வாக்குறுதி வழங்கியதாகவும், அதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்றும் கைவிரித்துள்ளார் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத் நேற்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

அப்போது தீபாவளிக்கு முன்னதாக 32 அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதாக அரசாங்கம் கூறிய போதும், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து அவரிடம் அரசியல் கைதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அவ்வாறான வாக்குறுதிகள் எவற்றையும் தாம் வழங்கவில்லை என்றும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் சொலிஸிட்டர் ஜெனரல் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

அவரது பதில், தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தவாரம்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடத்தப்பட்ட உயர்மட்டக் கூட்டத்திலேயே 32 அரசியல் கைதிகள் முதற்கட்டமாக, நேற்று விடுவிக்கப்படுவர் என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை வெலிக்கடைச் சிறைச்சாலை யில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவரின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உணவருந்துமாறு கோரிய போதும் கைதிகள் அதனை நிராகரித்துள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ய