இலங்கையில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் குறித்த நூல் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த நோர்வே மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும், ‘ஒரு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு – இலங்கையுடனான நோர்வேயின் அமைதி ஈடுபாடு’ (To End a Civil War : Norway’s Peace Engagement with Sri Lanka) என்ற நூல், நேற்று முன்தினம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.
கடந்தமாதம் 28ஆம் நாள் லண்டலில் வெளியிடப்பட்ட, இந்த நூல், நேற்று முன்தினம் ஒஸ்லோவில் உள்ள அமைதிக்கான ஆய்வு நிறுவகத்தில் நடந்த வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வில் நூலாசிரியர் மார்க் சோல்டர், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வேயின் முன்னாள் உதவி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வெளியீட்டு நிகழ்வில், இலங்கையில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர்பான விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.இலங்கை அமைதி முயற்சிகளில், நோர்வேயின் சார்பில் பங்கெடுத்த அந்த நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான சிறப்புத் தூதுவராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும், நோர்வேயின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனும் இந்த நூலுக்குத் தேவையான தகவல்களை அளித்துள்ளனர்.
இந்த நூலை பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் மார்க் சோல்டர் எழுதியுள்ளார்.
இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த, நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக, இந்த நூலில் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.