போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது இலங்கை
போர்க்குற்றம்சாட்டை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ஓய்வுபெற்ற பின்னர், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக பதவி உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்நதப் பதவி உயர்வு எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய தகவல் அதையும் அந்த ஊடகம் வெளியிடவில்லை. அதேவேளை, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், இறுதிக்கட்டப் போரில், 57ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார்.
இவரது படைப்பிரிவு, வன்னியில், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல் உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அதற்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சுவிற்சர்லாந்துக்குள் இவர் நுழைந்தால், போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்று, அந்த நாட்டின் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்ட போது, அனைத்துலக மட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இராணுவத்தில் உயர் பதவி அளிக்கப்பட்டது குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும், இராஜதந்திர மட்டங்களும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தன.
இந்தநிலையிலேயே, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டால் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட மூன்று மூத்த மேஜர் ஜெனரல்கள் விரைவில் ஓய்வுபெறவுள்ளதாக அண்மையில் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.