நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை – சமந்தா பவர் பாராட்டு
மூன்று பத்தாண்டுகளாக நீடித்த பிரிவினை கோரிய உள்நாட்டுப் போருக்குப் பின்னர், சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முயற்சிகளை ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் பாராட்டியுள்ளார்.
சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த அவர், நேற்று முன்தினம் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“காணிகளை மீள ஒப்படைக்கும் நடவடிக்கை, காணாமற்போனோரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கம் என்பன, போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடரும் காயங்களை ஆற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
குறுகிய காலப்பகுதிக்குள் நிறையவே செய்யப்பட்டுள்ளன.
நிலங்களை மீள ஒப்படைத்தல், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமற்போனோர் விவகாரம், பொறுப்புக்கூறும் பொறிமுறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட உறுதிமொழிகளை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்