கோத்தாவை கைது செய்ய முடியாது - நீதி அமைச்சர் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் கலப்பு விசாரணையையும் சர்வதேச நீதிபதிகளையும் எதிர்ப்ப தாக கூறிக் கொள்ளும் தேசப்பற்றாளர்கள் இலங்கையில் நீதித்துறைமீது நம்பிக்கையில்லை என்கிறார்கள். இதுவா இவர்களது தேசப்பற்று என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
"எவன்கார்ட்" விவகாரத்தைப் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ஷவை கைதுசெய்ய முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற எவன்கார்ட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டஉரையாற்றும் போதே நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சட்டமா அதிபரோ திணைக்களமோ எவன்கார்ட் நிறுவனத்திற்கு சார்பாக எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சட்டமா அதிபர் நேர்மையாக செயற்படுபவர். அவருக்கு சுவிஸில் வங்கிக் கணக்கு இருப்பதாக கூறப் பட்டது. அங்குசேமிப்பில் 6 சதமேனும் அவ ருக்கு இருப்பதாக நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்.
எவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக வெடிமருந்துகள், கொள் கலன்கள் விவகாரம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தது. சட்டமா அதிபரும் தெரிவித்தார்.
பொலிஸார் விசாரித்து குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டால் தான் குற்றவியல் தண்டனையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.எவன்கார்ட் மிதக்கும் கப்பல் ஐ.நா.பிரகடனங்களுக்கு அமையவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதில் எவ்விதமான குற்ற வியல் காரணங்களும் கிடையாது.
ஐ.நா. விசாரணை, ஹைபிரிட் விசாரணை மற்றும் சர்வதேச நீதிபதிகள் இங்கு வருவதைஎதிர்ப்பதாக கூறிக் கொண்டு தம்மை தேசப்பற்றுள்ளவர்களாக காட்டிக் கொள்பவர்கள் மறுபுறம் உள்நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கையில்லை என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மீது நம்பிக்கையில்லை என்கின்றனர்.
இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதால் எமது நாட்டுக்கே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சர்வதேசம் எமது நாட்டைப் பற்றி எவ்வாறு சிந்திக்கும்.?அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது நாம் அதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் முன்வைத்தோம்.
அமைச்சரவையில் தலைவராக பிரதமரை பரிந்துரை செய்தோம். ஆனால் எமது கருத்தை சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றம் என்பன நிராகரித்தன. இதனை நாம் ஏற்றுக் கொண்டோம். எமக்கு நாட்டின் சட்டத்துறை மீது நம்பிக்கையுள்ளது. அதனை மதிக்கிறோம்.
எவன்கார்ட் விடயம் தொடர்பில் 3000 ஆவணங்களை ஆராய்ந்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சட்ட ரீதியாகவே அனைத்தும் இடம்பெற்றன. நான் சட்டத்தரணி என்ற ரீதியில் இதனை அறிவேன். ஆனால் இது தொடர்பில் சட்டமே தெரியாவர்கள் இது தொடர்பில் கருத்துக்களை வெ ளியிடுகின்றனர்.
சிலர் இவ்விடயத்தைப் பயன்படுத்தி கோத்தாபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். இதனை நான் எதிர்த்தேன். அவருடன் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சட்டத்தின் பிரகாரம் சரியான தீர்மானத்தையே எடுக்க வேண்டும்.
இதனை நான் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தெளிவுபடுத்தினேன். இதன்போது இருவரும் சட்டத்தின் பிரகாரம் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு என்னிடம் தெரிவித்தனர்.எமது ஆட்சியில் எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லை. கடந்த காலங்களில் நீதியில்லாத நிலைமை காணப்பட்ட நாட்டில் இன்று நீதியும் சட்டமும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.. இதனை சீர்குலைக்க வேண்டாம் என்றார்.