இன்றும் நாடுமுழுவதும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி தொடரும்
வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகங்களில் இன்னும் அதிகமான மழைவீழ்ச்சி பதியப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் மன்னார் அம்பாந்தோட்டை கொழும்பு காலி முதலான கடலோரங்களிலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் காற்றின் வேகம் 70 – 80 கிலோ மீற்றரளவில் வீசக்கூடுமென்பதால் பொதுமக்கள் மீனவர்கள், கடற்துறை சார்ந்தவர்கள் என அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.