புலிகளுக்கு எதிரான தடை தொடரும் - அரசாங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை பின்பற்றும் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான தடை தொடரும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை கைவிடுமாறு தடை செய்யப்பட்டுள்ள அனைத்து அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களிடமும் அரசாங்கம் கோரியுள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் 16 அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த 20ம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் 8 அமைப்புக்கள் மற்றும் 267 தனிப்பட்ட நபர்களை இந்த பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. தடை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் வருடாந்தம் மீளாய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
நல்லாட்சி,ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, பொறுப்புகூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கை என்னும் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.