எட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்று பிணை?
தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களில் 62 பேருக்கு முதலில் பிணை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன் ஒரு கட்டமாக கடந்த 11ஆம் திகதி, 31 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே பிணைவழங்கப்பட்ட கைதிகளில் 26 பேர் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 24 பேர் மாத்திரமே இதுவரை சிறையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எஞ்சியோரில் நால்வருக்கு எதிராக வேறு வழக்குகள் உள்ளதாகவும், ஏனையோருக்கு பிணை வழங்க யாரும் இதுவரை முன்வரவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவதற்கு தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதேவேளை, நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.