உறுதிமொழிகள் இல்லாமல் எவ்வாறு உண்ணாவிரதத்தை நிறுத்தக்கோருவது : வடக்கு முதல்வர்
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறு உங்களால் கூற முடியாதா? என சுவிசர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் கேள்வி எழுப்பியதற்கு, என்ன அடிப்படையில் உண்ணாவிரதத்தினை நிறுத்த சொல்லுவது, அவ்வாறு செய்ய என்னால் முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
யாழிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட சுவிசர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் வோல்கர் நோதோர்கோன் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் போது, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என சுவிஸர்லாந்து தூதுவர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளிக்கையில், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கூறியதாகவும், கைதிகளை விடுவிப்பதற்கான எண்ணம் தன்னிடம் இருந்தால் கூட, அவற்றினை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு அரசியல் காரணங்கள் கட்டுப்படுத்துவதாக ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.
அதேநேரம், 100ற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். 23 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. 9 பேர் இறக்கும் நிலைமையில் இருக்கின்றார்கள். நீர் கூட அருந்தாமல் இருக்கும் தருணத்தில் மக்களின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகின்றது.
உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறு என்னால் அரசியல் கைதிகளுடன் பேச முடியும். ஆனால், என்ன அடிப்படையில் அவர்களிடம் உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறு கேட்பது?
எதிர்வரும் திங்கட்கிழமை ஒரு முடிவினை தருவதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். எந்த முடிவும் இல்லாமல் இருக்கின்ற நிலையில், அவர்களை உண்ணாவிரதத்தினை நிறுத்துங்கள் என்று கூற என்னால் முடியாது. அதனால் தான் தயங்கிக்கொண்டிருக்கின்றேன்.
அதேவேளை, சுவிஸ் தூதுவர், கடந்த வருடங்களுக்கு முன்னர் அரசியல் கைதிகள் 3 பேர் உயிரிழந்தார்கள். ஆனால், அவர்களின் உயிரிழப்பு குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. உங்களின் மக்கள் இறந்தால், உங்களுக்கு நட்டமே தவிர, அவர்களுக்கு நட்டம் இல்லை தானே. அரசாங்கத்திற்கு நட்டம் இல்லை தானே என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இந்த கேள்வி எமது மக்களுக்கு நன்மை பயக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். இது ஒரு பாரதூரமான விடயம். மக்கள் தமது எதிர்ப்பினை அகிம்சை வழியில் எடுத்துக் காட்டுவதற்கு தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
அவ்வாறு செய்ததன் பிற்பாடும், அதனால் நன்மைகள் பெற முடியாமல் போய் விட்டால், பதவியில் உள்ளவர்கள் பெரிதாக அதிகாரத்தில் உள்ளவர்கள் எடுக்காமல் விட்டால், அதனால் எந்தவித நன்மையும் பெறாது என்றால் எமது மக்கள் தம்மைத் தாமே வருத்திக்கொள்ள வேண்டியவர்களாகவே மாற வேண்டி இருக்கும்.
எது எவ்வாறு இருந்தாலும், முடியுமானவரை வேறு எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் என முதலமைச்சர் பதிலளித்தார்.
அரசியல் ரீதியாக உதவி செய்ய இருப்பதுடன், புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கு பல விதத்திலும் உதவிகள் செய்திருக்கின்றார்கள் என்றும் சில காலத்தின் முன்னர் சிங்கப்பூர் சென்று அரசாங்கத்தினதும், எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அது குறித்து பேசியிருக்கின்றார்கள் என்றும் தொடர்ந்து அது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தங்களால் முடிந்த உதவிகளை தருவதாகவும், சுவிஸ் தூதுவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் மக்களுக்கு நன்மைகளை செய்து வருவதாகவும், அதேநேரம், இங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக வருகை தந்துள்ளதுடன், வடமாகாண சபையினால் உருவாக்கப்டவுள்ள நியதிசட்டங்களை உருவாக்குவதற்கு உதவி செய்வதாக கூறினார்.
தொடர்ந்து சுவிசர்லாந்து மக்களுக்கும் எங்களுக்கும் இடையில், இருக்கும் உறவுகளை வலுப்படுத்துவதுடன், உதவித் திட்டங்களை மேலும் வழங்குவதாகவும் சுவிசர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.