யுத்தத்தின்போது பெறப்பட்ட நகைகளை மஹிந்த தனது பாரியாருக்கு வழங்கினாரா-? சுமந்திரன் கேள்வி
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி தற்பொழுது வரையில் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.
வடக்கில் பெறப்பட்ட நகைகளை மஹிந்த ராஜபக் ஷ தனது பாரியார் அணிந்து கொள்வதற்கு வழங்கினாரா எனவும் அவர் வினா தொடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப் புவேளை மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் சபையில் உரையாற்றுகையில்
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து அங்கு பெருமளவான ஆயுதங்களும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் முன்னாள் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக கிளிநொச்சிக்கு சென்ற போது குறிப்பிட்டளவானோருக்கு தங்க நகைகளை வழங்கியிருந்தார்.
யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை 5 வருடங்களாக வைத்திருந்த ஜனாதிபதி அவற்றை என்ன செய்தார் என்ற கேள்வி எழுகிறது. அதே நேரம் ஏனைய தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக பொதி செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவற்றிற்கு என்ன நிகழ்ந்தது என்பது தெரியாதுள்ளது. இவற்றின் உண்மை நிலைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் எஞ்சிய நகைகள் எங்கே? அவற்றை மஹிந்த தனது பாரியார் அணிவதற்கு வழங்கினரா?
கே.பி.யைக் கைது செய்தார்கள். இன்று வரையில் அவர் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்படாத நிலையில் உள்ளார். அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென ரீட் மனுவொன்றை பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்துள்ள போதும் அவர் முன்னிலைப்படுத்தப்படவில்லை. விசாரணைகள் இன்றிய நிலையிலேயே இருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் 20வருடங்களுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகளை 7 வருடங்களுக்கு அதிகமாக தடுத்து வைத்திருக்க முடியாது. இருப்பினும் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை வெளிப்படுத்தும் போது தமிழ் அரசியல் கைதிகள் இல்லையென அமைச்சர்கள் முண்டியடித்துக்கொண்டு கூறுகின்றார்கள். தமிழ் அரசியல் கைதிகள் உண்ணா விரதத்தை மேற்கொண்டிருந்த சமயத்தில் ஒக்டோபர் 31 ஆம் திகதி ஆரம்பித்து நவம்பர் 7 ஆம் திகதிக்குள் இந்த விவகாரத்தை நிறைவு செய்வதாக அரச தரப்பில் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஊழல் மோசடிகள், எவன்கார்ட் விடயம் தொடர்பாக இந்த சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் அனைவரும் அமைதியாக இருக்கின்றார்கள். ஆகவே குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பது உறுதியாகின்றது.
உண்மையிலேயே மிதக்கும் ஆயுதக் கப்பலொன்று கண்டுபிடிக்கப்பட்ட போது மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இவ்வாறான ஆயுதக் கப்பல்கள் இலங்கையை தாண்டி ஆபிரிக்காவின் கரையோரத்தில் இருக்கின்றதாக தகவல்கள் உள்ளன.
ஆபிரிக்காவில் ஆயுதங்கள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன என்பது இந்த விடயத்தின் ஒரு பக்கமாக உள்ளது. மறுபக்கத்தில் இவ்வாறான கப்பல்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன. இதனுடைய பங்காளிகள் யார் என்ற வினாக்கள் உள்ளன. பயங்கரமான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படும் போது அல்லது வாடகைக்கு பெறப்படும் போது அவற்றின் தொடர் இலக்கங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன.
அவ்வாறிருக்கையில் இலங்கையில் காலத்திற்கு காலம் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான பதிவுகள் உள்ளனவா? அவை தொடர்பான தகவல்கள் எங்கே? என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். தவறுகள் இடம் பெற்றிருக்கின்றன. எனவே அந்த உண்மைகள் நாட்டிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்படவேண்டும்.
தற்போது வரையில் அவ்வாறானவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மாறாக தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதிருக்கின்றன. சிறு சிறு குற்றங்களுடன் தொடர்புபட்டதாக கூறப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையானது தமிழர்கள் என்ற பாரபட்சத்தினாலா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை இந்நிலையில் அரசாங்கம் அடுத்த வருடம் வரை நீடிக்குமா என்று ஐயம் ஏற்பட்டுள்ளது என்றார்.