போர்க்குற்ற விசாரணை குறித்து ஜனாதிபதியுடன் கோத்தா பேச்சு
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பல்வேறு தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம், பஜட் வீதியில் உள்ள வதிவிடத்தில் ஜனாதிபதியை, கோத்தாபய ராஜபக்ச சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நடத்தப்படும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படையில், கோத்தபாபய ராஜபக்ச முக்கியமாக கலந்துரையாடியதாக, ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், கோத்தாபய ராஜபக்ச முக்கிய பங்கு வகித்தவர் என்பதால், போர்க்குற்றங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும், அவரை மையப்படுத்தியதாகவே இடம்பெறும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்திருப்பதாகவும், கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.