இறுதிகட்ட போரில் கருணா அணியினரும் களம் இறக்கப்பட்டனர் - அம்பலப்படுத்தினார் முன்னாள் தளபதி!
திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் நடாத்தப்பட்டதாக ஜக்கிய நாடுகளின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், திருகோணமலையிலோ அல்லது வேறும் இடங்களிலோ சித்திரவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. சித்திரவதைக் கூடங்களை நடாத்த வேண்டிய அவசியம் எதுவும் இருக்கவில்லை.
மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த கருணா தலைமையிலான தரப்பினர் படையினருடன் இணைந்து கொண்டனர். அவ்வாறானவர்களே திருகோணமலை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அரச படையினரிடம் சரணடைந்த கருணா தலைமையிலான புலிப்போராளிகளை பயன்படுத்தப்படாத கட்டடங்களில் தங்க வைத்திருந்தோம்.
2004ம் ஆண்டு புலிகளிடமிருந்து பிளவடைந்த கருணா அம்மான் தலைமையிலான பெருமளவிலான முன்னாள் புலிகள் படையினருடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.இவ்வாறு அரசாங்க படையினர் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் அம்பாறை மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவர்.
படையினர் சித்திரவதை கூடங்களை அமைத்து எவரையும் சித்திரவதை செய்யவில்லை எனவும் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.