நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம்! உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் ஆதங்கம்
எமக்கான விடுதலை விடயத்தில் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொ-ண்டேயிருக்கின்றோமென தமிழ் அரசியல் கைதிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் பலரின் உடல்நிலை சோர்வுடன் காணப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் உறவினர்கள் ஊடாக அரசியல் கைதிகள் கருத்து வெளியிடுகையில்,
நாம் ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்தவண்ணமுள்ளளோம். இருப்பினும் எமது விடுதலை தொடர்பாக தற்போது வரையில் எந்தவிதமான வாக்குறுதிகளும் வழங்கப்படாதிருக்கின்றது.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மில் பலர் விசாரணையின்றி இருக்கின்றார்கள். அதேநேரம் வழக்கு தொடுக்கப்பட்டவர்கள், தண்டனை அளிக்கப்பட்டவர்கள், மேன்முறையீடு செய்தவர்கள் எனக் பலர் காணப்படுகின்றார்கள். அவ்வாறாக உள்ளவர்களின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான வாக்குறுதிகளும் அரசாங்கத்தரப்பால் வழங்கப்படவில்லை.
அதுதொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகையோருக்கான நிரந்தர தீர்வு என்ன என்பது தற்போது வரையில் பகிரங்கப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இவ்விடயம் தொடர்பாக இறுதித்தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றார். எனவே அவரின் நிலைப்பாட்டை பகிரங்கமான அறிவிக்கவேண்டும்.
அவ்வாறான அறிவிப்பே நிண்டகாலமாக சிறைக்கூடங்களில் வாடிக்கொண்டு தற்போது விடுதலைக்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ள எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையும்.
நாம் நீண்டகாலமாக உறவுகளைப் பிரிந்து நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டு எமது எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில் இன்றிருக்கின்றோம். எம்மை நம்பியுள்ள பிள்ளைகள், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவருமே எதிர்பார்ப்புக்களுடனும், ஏக்கத்துடனும் பொழுதுகளை கழித்து வருகின்றார்கள். அன்றாட வாழ்க்கையை நகர்த்தமுடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் எமக்கு பிணையளிப்பதாக கூறி மீண்டும் மீண்டும் வெவ்வேறுபட்ட பிரதேசங்களில் காணப்படும் நீதிமன்றங்களுக்கு அழைப்பதானது மென்மேலும் சுமையை ஏற்படுத்துவதாகவே அமையும்.
எனவே எமக்கு பொது மன்னிப்பே இறுதி தீர்வாக கருதுகின்றோம். எமது கோரிக்கையின் யதார்த்தத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு நாட்டின் தந்தையான ஜனாதிபதியிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.