மீண்டும் உண்ணாவிரதம்?
தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிறைவேற்றத் தவறியுள்ளன. ஆகவே இன்று முதல் சாகும் வரையி லான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, எதிர்வரும் தீபாவளிக்கு முன் னர் 32 கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.தமிழ் அரசியல் கைதிகள் தம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறுகோரி கடந்த பன்னிரெண்டாம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளுடன் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது விடுதலைக்கான உத்தரவாதம் வழங்கினால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவதாக கைதிகள் தெரிவித்தனர். குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலமான அறிக்கையொன்றையும் கைதிகள் சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம் செப்டெம்பர் ஏழாம் திகதிக்கு முன்னர் கைதிகளின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். ஜனாதிபதியின் வாக்குறுதியைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பில் அரசியல் கைதிகள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 17 ஆம் திகதி புதிய மெகசின் சிறைச்சாலைக்குச் வந்த எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் கைதிகளைச் சந்தித்து, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஒக்டோபர் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் என்ற வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதியைத் தொடர்ந்து நாம் உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிட்டோம்
எனினும் அவர் வழங்கிய காலஎல்லை நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் விடுதலை ஆரம்பிக்கப்படவில்லை. மேலும் விடுதலை தொடர்பில் அரசாங்க தரப்பில் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாற்றமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதனையும் அறிய முடிகிறது. ஆகவே, விடுதலை குறித்து எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன. எனவே, எமது விடுதலை சாத்தியமாகுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல வருடகாலம் சிறைக்குள்ளே எமது ஆயுளை கழித்து விட்டோம். ஆகையினால் இனியும் உரிய காரணமின்றி சிறைக்குள் முடங்கிக் கிடக்க விரும்பாததால் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, நவம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்படாவிடத்து அதன் பின்னர் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துகொள்வதாக ஏற்கனவே அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.