உயிரை பணயம் வைத்து போராடும் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டும் - மாவை
உயிரை பணயம் வைத்து தமது விடுதலைக்காக சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தாமதமின்றி அவர்களை விடுதலை செய்ய இந்த அரசாங்கமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றினை கொண்டுவரவுள்ளதாக வும் அது தொடர்பாக தென்னிலங்கை கட் சிகளுடன் பேச்சுக்களை நடத்தவும் திட் டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அளவுகடந்த அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் நாம் முன்னெடுத்த உணர்வுபூர்வமான ஹர்த்தால் பூரண வெற்றியளித்துள்ளதுடன் அரசாங்கத்துக்கு இந்த விடயம் குறித்து தெளிவான ஒரு செய்தியையும் விடுத்துள்ளோம்.
சர்வதேச சமூகத்துக்கும் இந்த செய்தி உரத்து கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. அதன் அர்த்தம் இந்த சட்டத்தை நீக்குவதும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வதுமேயாகும்.
இந்த போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் என தமிழ் பேசும் முழு சமூகமும் பங்குபற்றியதும் குறிப்பாக, கொழும்பிலும் இப்போராட்டம் நடத்தப்பட்டமை வரவேற்கப்படவேண்டியதொன்றாகும். நீதிக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு மக்கள் மாத்திரமன்றி, தென்னிலங்கை மக்களும் போராட்டம் நடத்தினர். இதன் மூலம் இந்த அரசுக்கு தாக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக நாம் நம்புகின்றோம்.
கடந்த 7 ஆம் திகதியன்று சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலமாக வாக்குறுதியளித்திருந்தார். அந்த செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடமும் கூறியிருந்தார். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியின் வாக்குறுதியினைதமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்புமாறும் கூறினார். அதற்கிணங்கவே கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
கடந்த 5 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தடுத்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்றும் அந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார்.
இப்பொழுது கடினமான நிபந்தனைக்கு மத்தியில் 31 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதிலும் சட்டமா அதிபர் திணைக்களம் பல குளறுபடிகளை செய்துள்ளது. நாங்கள் பிரதமரை தொடர்பு கொண்டு, மீண்டும் எங்களை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறினோம். அதற்கு அவர் இந்த விடுதலை குறித்து சட்டமா அதிபருக்கு உத்தரவு வழங்கியுள்ளதாக கூறினார்.
இவ்வாறான நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது மிகுந்த கவலையளிக்கிறது. ஆகையினால் தான் நாம் கடந்த 13 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை மேற்கொண்டோம்.
தமிழ், முஸ்லிம்கள் என சிறுபான்மையினரின் அமோக வாக்குகளால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். எனவே எமது போராட்டத்தை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் காலதாமதமின்றி அவர்களை விடுவிக்க வேண்டும்.
கிழக்கில் நீதிமன்றம் மற்றும் வைத்தியசாலை சிறப்பு விழாவிற்கு செல்லவிருந்த ஜனாதிபதி, அந்த பயணத்தையும் இரத்துச் செய்யும் அளவுக்கு எமது போராட்டம் அமைந்திருந்தது. அதேபோன்று கடந்த 12 ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடமும் கைதிகள் விடுதலை விடயத்தில் நல்ல தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளார் ஜனாதிபதி.
உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்தும் கைதிகளுக்கு தாமதமின்றி விரைவான தீர்வை ஜனாதிபதி வழங்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய இன்று கூடவுள்ளது. வரவு - செலவு திட்டத்திற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு பிரேரணையொன்றை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். அதுமாத்திரமன்றி, தென்னிலங்கையிலுள்ள கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.