Breaking News

புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் தடைப் பட்டியல் மறுசீரமைப்பு!

விடுதலைப் புலிகளுக்கு சார்பான, அந்த அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமைப்புகள், நபர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான, அந்த அமைப்புடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் அமைப்புக்கள், நபர்கள் பெயர்களை வெளியிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை மறுசீரமைத்து நேற்று (20) விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 1854/41 என்ற வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய, அவர்களுக்கு ஆதரவான 17 அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. அத்துடன், 424 நபர்கள் மீதும் அதன் ஊடாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சுரங்கமொன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆவணங்களுக்கு அமையவே இந்தத் தடை விதிக்கப்பட்டதாக மகிந்த அரசாங்கம் கூறியிருந்தது.

இந்த தடைப்பட்டியலில் தற்போது உயிருடன் இல்லாத சில நபர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.