Breaking News

இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி - ஆங்சாங் சூகீ வரலாற்று வெற்றி

வரலாற்று முக்கியத்துவமிக்க மியன்மார் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங்சாங் சூ கீயின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சியமைப்பதற்குத் தேவையான 329 ஆசனங்களையும் விட அதிகமான 348 ஆசனங்களை ஆங்சாங் சூ கீயின் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. மியன்மார் இராணுவம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தை தனது பிடியில் வைத்துள்ளது.

இந்நிலையில் மியன்மாரில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, இதனால் பொருளா தார தடைகளை எதிர்க்கொள்ள வேண் டிய சூழ்நிலை மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அங்கு ஜனநாயக ரீதியிலான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங்சாங் சூ கீயின் எதிர்க்கட்சி அமோக வெற்றி யீட்டியுள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜன நாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான ஒற்றுமை கட்சிக்கும் ஆங்சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

440 இடங்களை கொண்ட பிரதிநிதி கள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல் சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நட ந்தது. அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, மீதமுள்ள 25 சதவீத இடங்களை இராணுவமே நிரப்பிக் கொள்ளும்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த மூன்று கோடி மக்களில் 80 சதவீதம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு முடிந்த ஞாயிற்றுக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் முழுமையான தேர்தல் முடிவு அறிவிப்பதில் கடந்த நான்கு நாட்களாக தாமதம் ஏற்பட்டது. ஆங் சாங் சூகி தான் போட்டியிட்ட காஹ்மூ தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆங் சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.

முன்பு அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த இராணுவ ஆட்சியாளர்கள் தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து தற்போது அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 348 தொகுதிகளில் ஆங் சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் செயலகம் முறைப்படி அறிவித்துள்ளது.