Breaking News

மரணத்துக்குப் பிந்திய விருப்பம் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சோபித தேரரின் காணொளி

தனது உடலை தகனம் செய்யாமல், உறுப்புகளை தானம் செய்த பின்னர் புதைக்க வேண்டும் என, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரர் விருப்பம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருந்த, சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மற்றும் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இறுதி நிகழ்வுகள் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை தேசிய துக்கநாளாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது இறப்புக்குப் பின்னர் செய்ய வேண்டியவை பற்றிய தனது விருப்பங்களை வண.மாதுளுவாவே சோபித தேரர்  காணொளி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.இந்தக் காணொளியில் அவர், தனது இறுதிச் சடங்கு எளிமையான முறையில் செலவுகளின்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் தகனம் செய்யப்படுவதை விரும்பவில்லை. எனது உடலை கண் தான சங்கத்துக்கு வழங்க வேண்டும். அவர்கள், உடலில் இருந்து எடுக்கக் கூடிய கண்கள், காதுகள் மற்றும் பயனுள்ள உறுப்புகளை எடுத்துக் கொள்ள முடியும்.

நான் கண்தான சங்கத்தின்  தலைமை ஆலோசகராக இருந்தேன்.  எனது உடல் பாகங்களை தானம் செய்ய விரும்புகிறேன். அதற்குப் பின்னர் எனது உடலை புதைத்து விட முடியும் ஒரு பௌத்த பிக்கு இறந்தால் ஆயிரக்கணக்கில் செலவு செய்வதும் அதற்கு குழுக்களை நியமிப்பதும் தேவையற்றது.

எனது விருப்பத்துக்குரிய பிக்குகளில் ஒருவரான வண.ரேருக்கனே சந்த விமல தேரரின் உடல் தகனம் செய்யப்படவில்லை. அவரது வேண்டுகோளின்படி அது புதைக்கப்பட்டது.

அதுபோலவே எனது இறுதிச்சடங்கு யாருக்கும் சிரமங்களை ஏற்படுத்தாதவாறு எளிமையாகவும், செலவுகளின்றியும் நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.