ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் இந்தியா
அதிநவீன எஸ் 400 ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் இந்தியா ரஷ்யா இராணுவ அதிகாரிகள் இடையே கையெழுத்து ஆனது.
இதன்படி ரஷ்யாவிடம் இருந்து ரூ.70 ஆயிரம் கோடிக்கு எஸ்-400 ஏவுகணையை இந்தியா கொள்வனவு செய்யும். இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இந்தியா செய்து கொண்டுள்ள இராணுவ ஒப்பந்தங்களில் இதுதான் மிகப்பெரியது என்று கருதப்படுகிறது.
இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பில் இந்தியா ரஷ்யா அரசுகள் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அண்மையில் இராணுவத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ரஷ்யா சென்றிருந்தார்.
இதன்போதே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. அத்துடன் அணுசக்தியில் நீர்மூழ்கி போர்க்கப்பல் ஒன்றை 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார்.
400 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் அதிநவீன எஸ் 400 ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்ய உள்ளது. .