கைதிகள் விடயத்தில் சம்பந்தன் காத்திரமான முடிவுகளை எடுப்பாரா?-வீரகேசரி
பொதுமன்னிப்பளித்து தங்களை விடுதலை செய்ய
வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஜனாதிபதியிடம் இருந்து இன்னும் நேரடியாக எந்தவிதமான பதிலும் வராத காரணத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது.
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொதுமன்னிப்பளிக்க வேண்டும் என்றும், அதற்கு காலக்கெடுவுடன் கூடியதோர் உத்தரவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அதனையடுத்து, நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கிடையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோகண புஷ்பகுமார ஊடாக எழுத்து வடிவில் உத்தரவாதம் வழங்கியிருந்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தனிடமும், ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியிருந்தார். இதனை சம்பந்தன் நேரடியாக மகசின் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து ஜனாதிபதியின் மீது நம்பிக்கை இருக்கின்றது.
அவர் எப்படியும் இது விடயத்தில் உறுதியளித்தபடி, நடவடிக்கை எடுப்பார் எனவே உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் காரணமாகவே, தமிழ் அரசியல் கைதிகள், சாகும் வரையிலான தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டிருந்தனர்.
ஆனாலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நம்பிக்கை தரத்தக்க வகையில், அரசாங்கத் தரப்பில் அவர்களுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது, குற்றம் செய்தவர்களும், குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களுமே சிறைச்சாலைகளில் இருக்கின்றனர், இவ்வாறு வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்க முடியாது, நீதிமன்ற நடவடிக்கைக்கு அமைவாகவே அவர்களை விடுதலை செய்வது பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில், ஒரு சிலரை மாத்திரமே பிணையில் விடுதலை செய்வதற்கு பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது, என்றெல்லாம் அரசாங்கத் தரப்பில் இருந்து கருத்துக்கள் அமைச்சர்கள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆகியோரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதுடன், இதுவிடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டை வேகப்படுத்துவதற்குத் தேவையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஏனோ தானோ என்று செயற்படுகின்றார்களே என்று ஆதங்கப்படும் அளவிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு நவம்பர் 7 ஆம் திகதிக்கிடையில் தீர்வு காணப்படும் என்று 3 வாரம் கால அவகாசம் எடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி கூறியிருந்தார்.
ஆயினும் இந்த மூன்று வார காலப்பகுதியில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து இந்த விடயம் குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தவோ, அவரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் எழவிருக்கின்ற நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறவோ - இதுவரையில் முடியாமல் போயிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பளிப்பது என்பதும், அவர்களை விடுதலை செய்வது என்பதும் அரசாங்கத் தரப்பினருக்கு எந்த வகையிலும் முக்கியமான பிரச்சினை என்று கூற முடியாது.
ஆனால், தமிழ் அரசியல் கைதிகளுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், அதேநேரம் அரசியல் ரீதியாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குமே அது முக்கிய பிரச்சினையாகும்.
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நவம்பர் 7 ஆம் திகதி நெருங்க, நெருங்க, தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் பதட்ட நிலை உருவாகி வருகின்றது. தங்களை, பொதுமன்னிப்பளித்து அரசாங்கம் விடுதலை செய்யவில்லையென்றால், தாங்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக அவர்கள் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.
நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள், அந்தக் காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 8 ஆம் திகதி தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினையாகும். முறையான விசாரணையின்றியும், குற்றம் செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படாமலும், அவர்கள் பல வருடங்களாகச் சிறைவாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். என்ன காரணத்திற்கென கூறப்படாமலேயே அவர்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார்கள்.
இந்தத் தண்டனை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும், அல்லது தங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் அவர்கள் இருந்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்கள், தங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்று அரசாங்கத்திடம் நீண்டகாலமாகவே போராடி வந்திருக்கின்றார்கள். அவர்களுடைய போராட்டத்தை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கவனத்திற்கொண்டு அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
நீண்ட காலமாக சிறையில் இருக்கின்றார்களே என்பதற்காக அவர்கள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் அனுதாபம் கொண்டிருக்கவில்லை. மாறாக அவர்களை, தங்களுக்கு வேண்டாதவர்களாக, ஜென்ம விரோதிகளாக அந்த அதிகாரிகள் நோக்கி வருகின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவர்களை, இம்சிப்பதிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் அதிக நாட்டம் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.
இத்தகைய கருத்துருவாக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே சிறைச்சாலைகளில் பல சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.
விடுதலைப்புலிகள் இராணுவ பலம் கொண்டு திகழ்ந்த காலத்தில் அவர்கள் அனுஷ்டித்து வந்த மாவீரர் தினம், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் யுத்த மோதல்களில் விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றிருந்த சம்பவங்கள் அல்லது அவர்களின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூர்கின்ற தினம் போன்ற,
விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்ட நினைவு தினங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய தினங்கள் அல்லது அவற்றுடன் தொடர்புடையதாக ஏதேனும் சம்பவங்கள் நடைபெறும்போது குரோத மனப்பாங்குடன் சிறையதிகாரிகள் தமிழ் அரசியல் கைதிகளைக் 'கவனிப்பது' வழமையாக நடைபெற்று வந்துள்ளது.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் முறையற்ற வகையில் அல்லது மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொள்ளும்போது, அதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் விசாரணையென்ற போர்வையில் தனிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிந்தாலும், தாங்களும் மனிதர்களே, இந்த நாட்டின் பிரஜைகளே என்றவகையில், சிறை வாழ்க்கையில் தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் அல்லது முறையற்ற நடவடிக்கைகளின்போது, நியாயத்திற்காகவும், சிறைக்கைதிகள் என்ற வகையில் அவர்களுக்கு உரிய உரிமைகளுக்காகவும் போராடிய தமிழ் அரசியல் கைதிகள் சிறையதிகாரிகளினால் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதனால் பலர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த 1983 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் அரசியல் கைதிகளின் மீதான தாக்குதல்களும், அதனால் ஏற்படுகின்ற மரணங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் தங்களுடன் இருந்த கைதி ஒருவரை சித்திரவதை செய்யும் நோக்கத்துடன், அவரைத் தனிமைப்படுத்துவதற்காக, சிறையதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எதிர்த்திருந்தனர். அந்த எதிர்ப்பை சிறைச்சாலை அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை.
இதனால் சிறைச்சாலைக்குள் போராட்டம் வெடித்தது. சிறையதிகாரிகளைச் சிறைப்பிடித்த தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்கள். இதனால், தமிழ் அரசியல் கைதிகளின் பிடியில் இருந்த சிறையதிகாரிகளை மீட்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் பகிரங்கமாகத் தாக்கினார்கள். தாக்கினார்கள் என்பதைவிட அவர்களை அடித்துத் துவைத்து துவம்சம் செய்திருந்தார்கள்.
அதே நிலையில் அவர்களை வவுனியாவில் இருந்து உடனடியாகவே அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்று ஓர் இரவு முழுதும், அவர்களை ஆளாளுக்கு மாறி மாறி அடித்துத் துன்புறுத்தினார்கள் சித்திரவதை செய்தார்கள். அத்துடன் விடவில்லை. குற்றுயிராகக் கிடந்த அந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு வைத்திய உதவிகள் எதனையும் வழங்காமல், அவர்களை வாகனங்களில் அள்ளிப்போட்டு, அதியுயர் பாதுகாப்புள்ள சிறைச்சாலையாகிய மகர சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றார்கள்.
வைத்திய கவனிப்பின்றியும், மனிதாபிமான கவனிப்பில்லாமலும் வாடிய அந்தக் கைதிகளில் வவுனியாவைச் சேர்ந்த நிமலரூபன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டில்றொக்சன் ஆகிய இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் மாண்டு போனார்கள். இத்தகைய பின்னணியைக் கொண்ட இலங்கையின் சிறைச்சாலைகளில் விடுதலையின்றியும் விசாரணைகளின்றியும் வாடுகின்ற தங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையிலேயே, தங்களுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழ் அரசியல் கைதிகள் போராடி வருகின்றார்கள்.
இதனை அரசாங்கம் சரியாகப் புரிந்து கொண்டு மனிதாபிமான ரீதியில் அவர்களுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முன்வர வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில், நல்லாட்சி நடத்துவதாகக் கூறுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தின் முன்னால் விஸ்வரூபம் எடுத்துள்ள, இந்தப் பிரச்சினைக்கு தமிழ் அரசியல் கைதிகள் உடன்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான ஒரு தீர்வை எட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு நவம்பர் 7 ஆம் திகதியை காலக்கெடு வைத்து தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தாலும்கூட, அவர் இதுவிடயத்தில் என்ன வகையான நடவடிக்கையை எடுக்கப் போகின்றார் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. அவர் மௌனம் சாதித்து வருகின்றார். கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியைத் தவிர ஏனைய அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆளாளுக்கு ஒவ்வொரு விடயத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனால் குழப்பமான ஒரு நிலைமையே உருவாகியிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு என்ன தீர்வு காணப்படும், அது தொடர்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது ஜனாதிபதியின் கடமையாகும். அத்தகைய தெளிவுபடுத்தல் இல்லாத காரணத்தினால், பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதம் அல்லது உறுதிமொழி வெறும் புஸ்வாணம் ஆகிவிடுமோ என்ற அச்சமும் பதட்டமும் தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் நாளுக்கு நாள் மேலோங்கி வருகின்றது, இந்த சந்தேகம் காரணமாக அந்தக் கைதிகளின் குடும்பத்தினரும் உறவினர்களும்கூட பெரும் கவலையடைந்திருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன், ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையைத் தெளிவுபடுத்தவில்லையே என்ற ஆதங்கம் தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் மேலோங்கியிருக்கின்றது. தமது விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உரிய அக்கறையோடு செயற்படத் தவறிவிட்டது என்று அவர்கள் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறவினர்களும்கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கியிருந்த காலக்கெடு இந்த வாரத்தில் முடிவடையவுள்ளது. இந்த நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராஜா, இந்த வாரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும், ஏனைய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என கூறியிருக்கின்றார்.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தோரணையிலான கருத்தும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்து.
இந்த நிலையில், தீவிரமான ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேச்சுக்களை நடத்துவதற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கியமான பதவியைப் பயன்படுத்தி போதிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் அரசியல் கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் கவலையடைந்திருக்கின்றார்கள்.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பளித்து விட முடியாது என்பதே அரசாங்கத்தின் பொதுவான நிலைப்பாடாகத் தோன்றுகின்றது. நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாகவே அவர்களுடைய விடுதலைக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று நீதி அமைச்சர், சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோரும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோகண புஷ்பகுமாரவும் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் பல ஆண்டுகளாகவே, நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏமாற்றமும் சலிப்பும் விரக்தியும் அடைந்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலைக்காக மீண்டும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தங்கியிருக்க ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சட்டத்தையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் பின்பற்றியே ஆக வேண்டும் என்ற போக்கிலேயே அரசாங்கத் தரப்பினர் இன்னும் பிடிவாதமாக இருக்கின்றார்கள். நாட்டின் சட்ட நடவடிக்கைகளுக்கு முரணான வகையில் நீண்டகாலமாக விசாரணைகளோ, முறையான குற்றச்சாட்டுக்களோ இல்லாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் துணைகொண்டு தமிழ் அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது என்பதை அரசாங்கம் தெளிவாக உணர வேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப்புலி உறுப்பினர்கள், 11 ஆயிரம் பேரை புனர்வாழ்வுப் பயிற்சியளித்து சமூகத்தில் இணைத்திருப்பதாகப் அரசாங்கத் தரப்பினர் பெருமை பேசுகின்றனர். அதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக, ஆயுதமேந்தி போராடியவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள், அவர்களுக்கு உதவி புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்குத் தயக்கம் காட்டி வருவது வேடிக்கையாக இருக்கின்றது.
சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அத்தகைய 200க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதென்பது, சட்டவிரோதமானது என்று அரசாங்கம் கருதுவது இன்னும் வேடிக்கையான செயற்பாடாகும்.
ஆட்களைக் கடத்தினார்கள், கொலை செய்தார்கள், அரசாங்க சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தார்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார்கள் என்று எந்தவிதமான நேரடியான குற்றச்சாட்டுக்களும், அதற்கான ஆதாரங்களும் இல்லாத நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சட்டரீதியாகப் பார்த்தாலும்கூட, தமிழ் அரசியல் கைதிகளை ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டாமலும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமலும் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றவர்களைப் போன்று தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு முரணான நடவடிக்கையாகும்.
நாட்டின் சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைத் தணிப்பதற்காக ஆயிரம் கைதிகளை அடைத்து வைக்கத்தக்க வகையில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலை கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, 10–15 ஆண்டுகளாக விசாரணைகளின்றியும் வழக்கு தாக்கல் செய்யப்படாமலும் நகைப்புக்கு இடமான வகையில், இலங்கையிலேயே சிறைச்சாலைகளில் ஆட்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என கூறியிருக்கின்றார்.
அரசாங்கத்தின் ஓர் அங்கமாகிய அமைச்சர் ஒருவரே நீதித்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட சிறைக்கைதிகள் விடயத்தில் இவ்வாறு ஏளனமாகக் கருத்து வெளியிட்டிருப்பதை அரச தலைவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். அரசாங்க அமைச்சர் ஒருவரே இவ்வாறு சிறைக்கைதிகள் விடயத்தை எள்ளி நகையாடியிருக்கின்றார் என்றால், மற்றவர்களும் வெளிநாடுகளும் எந்த அளவுக்கு இந்த அரசாங்கத்தை ஏளனமாக நோக்குவார்கள் என்பதையும் அரச தலைவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்பட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும். அவ்வாறு தீர்வு காணத் தவறியதற்கான விளைவுகளுக்கும், அல்லது நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க நேரிடும்.