Breaking News

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரேயடியாகப் பொது மன்னிப்பு அளிக்கப்படாது – விஜேதாச ராஜபக்ச

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரேயடியாகப் பொது மன்னிப்பு அளிக்கப்படாது என்றும், அவர்கள் கட்டம் கட்டமாகவே விடுவிக்கப்படுவர் என்றும், இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், யாழ். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டவாளர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார். அப்போது அவர்,

“சிறைகளில் மூன்று வகையான தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் வழக்கிற்கு முகம்கொடுக்க வேண்டியவர்கள் என இவர்களை வகைப்படுத்தலாம்.

இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக சிறப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படும்.இந்தநிலையில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபடாத குறிப்பிட்ட சிலர் விடுவிக்கப்படவுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் மீது பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களமே முடிவெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களும் தற்போது சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனரஎனவே பாரதூரமான குற்றச்சாட்டுக்களில் தொடர்புபடாதவர்கள் விடுதலை செய்யப்படுவதுடன் மற்றையவர்களுக்குப் பிணை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பாரதூரமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பிலும் ஆலோசித்து வருகிறோம்.அத்துடன் மேற்குறித்த சிறைக்கைதிகளின் விசாரணைகளை மேல்நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றங்கள் துரிதமாக மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.