கூட்டமைப்பு ஆதரவளித்தால் தமிழ் இனவாதத்தை ஒழிக்கலாம் - கிரியெல்ல
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தால் இந்த நாட்டில் தமிழ் இனவாதத்தை ஒழிக்கலாம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு தற்போது அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில், வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் கோரினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுiகியல்,
‘போட்டிக் கட்சிகளாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அhப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவர்களைத் தலைவர்களாக் கொண்ட இவ்விரு கட்சிகளினதும் கொள்கையில் சிறு சிறு வித்தியாசமே உள்ளது.
இரு கட்சிகளும் இணைந்து இனவாதத்தை ஒழிக்கலாம். சிங்கள இனவாதத்தை நாங்கள் ஒழிக்கிறோம். அதேபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இருந்தால் தமிழ் இனவாதத்தையும் ஒழிக்கலாம்.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கவுள்ளோம். இதனூடாக வடக்கு, கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அத்துடன், சர்வதேசத்திலுள்ள பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். இரண்டு கட்சிகளும் பிரிந்திருந்தால்தான் சர்வதேசம் எம்மைப் பயன்படுத்தும்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் நான் கோரிக்கையொன்றை முன்வைக்கிறேன். வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு அழைப்பு விடுத்து, வடக்கு, கிழக்கில் முதலீடு செய்யுமாறு கூறுங்கள்.
அதுமட்டுமல்ல, சிங்களவர்களும் வெளிநாடுகளில் உள்ளனர். எனவே, வெளிநாடுகளிலுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இணைந்து அழைப்பு விடுப்போம்’ என்றும் கூறினார்.