ஐ.நா குழு முன்னிலையில் சாட்சியமளித்தோருக்கு அச்சுறுத்தல் – அரசு விசாரிக்கும் என்கிறார் மங்கள
காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவிடம் சாட்சியமளித்தோர், அச்சுறுத்தப்பட்டதான குற்றச்சாட்டுத் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த ஐ.நா பணிக்குழுவினர் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, தம்மைச் சந்தித்த பலர் அச்சுறுத்தப்பட்டதாகவும், சாட்சிகளைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இலங்கை அரசதரப்புடனான சந்திப்பின் போதும், ஐ.நா குழுவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, இலங்கை வெளிவி்வகார அமைச்சர் மங்கள சமரவீர,
இலங்கை வந்த ஐ.நா குழுவினர் தமது பயணத்தின் முடிவில் என்னைச் சந்தித்து தமது பயணம் குறித்து விளக்கமளித்திருந்தனர். இதன்போது தமது குழுவினரைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் முறையிட்டனர். அவ்வாறு யாராவது அச்சுறுத்தல் விடுத்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தின் கொள்கையாக இருக்காத போதும், ஒருசிலர் இன்னமும் பழைய சிந்தனையுடன் செயற்படுகின்றனர். இவ்வாறு செயற்படுபவர்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் இருப்பது எமக்குத் தெரியும்.
குற்றச்சாட்டு உண்மையாயின் விசாரணை நடத்தி அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்களை ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது காலம்கடந்த ஒன்று. இந்தச்சட்டத்தை நீக்கிவிட்டு தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான மற்றும் அனைத்துலக பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்கக் கூடிய புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.