மரணித்தவர்களை மதிக்காமல் அதனைத் தடுக்க முயல்வது நல்லிணக்கத்தை பாதிக்கும் : சம்பந்தன்
மரணித்த தமது உறவுகளுக்கு ஈமக்கடன் நிறைவேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு என்றும், அதனை எவராலும் தடுக்க முடியாதென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மரணித்தவர்களை மதிக்காமல் அதனைத் தடுக்க முயல்வது நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்யுமென்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
நாளை (வெள்ளிக்கிழமை) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடப்பது நல்லாட்சி என்பது உண்மையாயின், தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கும், மரணித்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய அவர், இவற்றை தடுப்பது பாரிய மனித உரிமை மீறலாகுமென வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மரணித்தவர்களை நினைவுகூருவதைத் தடுக்க முயல்வது தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும் என்றும், நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும் என்றும் இந்த அரசுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.