தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடுகிறது
நாட்டின் நீதித்துறையையும் சட்டத்தையும் மீறி செயற்படுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்துகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடி வருகின்றது என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்கத்துக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டன. இவ்வாறான நெருக்கடியானது சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்கு பாதிப்பாக அமையும் . ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அமைச்சரவைக்குள்ளேயே பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் பாரிய முரண்பாடுகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. பரஸ்பரம் முரண்பாடான கருத்துக்கள் அமைச்சர்களினால் விடுக்கப்பட்டுவருகின்றன. அமைச்சரவைக்கான கூட்டு பொறுப்பு இல்லாமல் போய்விட்டது.
ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொள்கின்றனர். அவ்வாறு பார்க்கும்போது நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார். மற்றுமொரு அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோருகின்றனர்.
அரசாங்கத்துக்குள் என்ன நடக்கின்றது என்று ஒருவருக்கும் புரியவில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு கட்சிகளும் தற்போது பிரிந்தே உள்ளன. எனினும் பதவிகளுக்கான இணைந்து வாழ்க்கை நடத்தவேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியானது சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.இது இவ்வாறு இருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறையை மூடிவிட்டு அவற்றுக்கு அப்பால் சென்று தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோருகின்றது. நாட்டின் நீதித்துறையையும் சட்டத்தையும் மீறி செயற்படுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்துகின்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கூட்டமைப்பு ஹர்த்தால் நடத்துகின்றது. இதன்மூலம் நாட்டின் நீதிமன்றத் துறையை மீறி செயற்படுமாறு அரசாங்கத்தை கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.மறுபுறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடி வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதில் கூட்டமைப்புக்கு பாரிய பங்கு உள்ளது. எனவே கூட்டமைப்பின் தாளத்துக்கு அரசாங்கம் ஆடி வருகின்றது.
நாடு அரசியல் பொருளாதார மற்றும் சட்டம் ஒழுங்கு துறையில் பாரிய நெருக்கடிகளை சந்தித்துவருகின்றது. இவற்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றோம். மக்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்திவருகின்றோம்.
பொருளாதார ரீதியிலும் தற்போது நாடு வீழ்ச்சிப் பாதையை நோககி பளணிக்கின்றது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிகண்டுவருகின்றது. பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.