Breaking News

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை! - சுவாமிநாதன்

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பாக, அரசியல் கைதிகள் இன்று தமது முடிவை அறிவிக்கவுள்ளனர்.

தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு கோரி கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு  அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்கத் தவறிய நிலையில், தம்மைப் புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு ஒரு தொகுதி கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று அலரி மாளிகையில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடத்தப்பட்ட உயர்மட்டக் கூட்டம் ஒன்றையடுத்து, மகசின் சிறைச்சாலைக்குச் சென்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடினார்.

இதன் போது, அரசியல் கைதிகள் புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு விடுத்த வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது குறித்து அரசாங்கம் சாதகமாக பரிசீலிப்பதாகவும், முதற்கட்ட குழுவினரை எதிர்வரும் 10 நாட்களுக்குள் புனவாழ்வளிப்பதற்கு அனுப்பி வைப்பதாகவும் பிணையில் விடுவிக்கப்படக் கூடியவர்களுக்குரிய நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இதற்கமைய, தம்மை புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்த 99 அரசியல் கைதிகளில், ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்ட 14 பேர் தவிர்ந்த, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகளை சந்திக்கும் ஏனைய 85 பேர் முதற்கட்டமாக புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

அதேவேளை, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் முன்வைத்த கருத்தை  அரசு பரிசீலித்து இது பற்றி சட்டமா அதிபருக்கு பரிந்துரை செய்யும் என்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த கைதிகள் 59 பேர் இருப்பது குறிப்பிடத்தக்கது.அரசாங்கத்தின் இந்த முடிவுகள் மற்றும் நிலைப்பாட்டை, இந்த அமைச்சர் சுவாமிநாதன் சிறைக் கைதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தார். அதற்கு அரசியல் கைதிகள், இதுபற்றித் தமக்குள் கலந்தாலோசித்த பின்னர் இன்று முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை அமைச்சர் சுவாமிநாதனுடன், அமைச்சர் சட்டம் ஒழுங்கு அமைச்சரர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் மகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.