Breaking News

வடக்கில் தொடர் மழையால் பெரும்போகம் பாதிக்கும் அபாயம்!

வடமாகாணத்தில் நேற்றய தினம் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி காணப்பட்டதாக தெரிவித்திருக்கும் வடமாகாண நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குளங்களுக்கான நீர் வரத்து அதிகரித்திருக்கும் நிலையில் நேற்றைய தினமே 19 குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


வடக்கில் நிலவும் காலநிலை சீர்கேடு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன், கரியாலை, நாகபடுவான், கல்மடு ஆகிய குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை விட 5 சிறிய குளங்களும் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

மேலும் வவுனியா மாவட்டத்தில் 17 குளங்களில் பெரியதம்பணை குளம், கல்மடு குளம், பம்பைமடு குளம், மஹாறம்பை குளம், ஏரவ்பொத்தானை குளம் ஆகியன வாய்பாய்ந்து கொண்டிருக்கின்றன.

மேலும் மன்னார் மாவட்டத்தில் பெரிய பண்டி விரிச்சான் குளம், தண்சணமருதமடு குளம், பெரியமடு குளம், அடம்பன் குளம், முள்ளிக்குளம் ஆகியன வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் வவுனிக்குளம், முத்தையன்கட்டு குளம், தண்ணி முறிப்புகுளம், கணுக்கேணி குளம், உடையார்கட்டு குளம் ஆகியன வாய்பாய்ந்து கொண்டிருக்கின்றன எனவும் மேலும் 14 சிறிய குளங்களும் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டு வான்பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் பாரிய அபாயம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளது. எனினும் இந்த பாதிப்பு குறித்து வெள்ளநீர் வழிந்தோடிய பின்னதாகவே கணிப்பிட முடியும் என்றார்.