Breaking News

அரசியல் கைதிகளுக்கு முழுமையான விடுதலையில்லை என்கிறது நீதியமைச்சு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாரதூ ரமான குற்றச்சாட்டு சுமத்தப்படாதவர்கள் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப் பட்டபோதிலும், அது முழுமையான விடுதலை யல்லவென நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளின் குற்றவாளிகளாகக் காணப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சுமார் 60 பேரை நீதிமன்றத்தின் ஊடாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்களை விடுவிப்பதை பாரதூரமான குற்றமாக அர்த்தம் கற்பிக்க சிலர் முற்படுகின்றபோதிலும், சந்தேகநபர்கள் தொடர்பில் உண்மையான நிலையை நாட்டு மக்களுக்கு மிகவும் தெளிவாக அரசாங்கம் எடுத்துக் கூறியுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்கள் அரச படையினரிடம் சரணடைந்ததுடன், அவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டம் நிலை தலைவராகக் கருதப்பட்ட நபர், கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிந்த விடயமாகும் என நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மிகவும் பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட 140 பேரை, 2010 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 22 ஆம் திகதியன்று அப்போதைய சட்டமா அதிபரான மொஹான் பீரிஸின் பணிப்புரைக்கமைய விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம்.

இதுதொடர்பில், தற்போதைய அரசாங்கம் மீது குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுகளை சமநிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன், நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட விடயங்களைக் கூறி மக்களை திசை திருப்புவதற்கு முற்படுகின்றமை, மீண்டும் நாட்டில் இனங்களிடையே அமைதியின்மை மற்றும் அதிருப்தி ஏற்பட இடமளிப்பதாக அமைந்துவிடும்.

அனைத்து தரப்புகளும் மிகவும் பொறுப்புடன் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்து செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என நீதியமைச்சர் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.