விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் படைத் தளபதிகளை சந்தித்தார் ஜனாதபதி
முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் படைத்தளபதிகள் நால்வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட, முன்னாள் கடடற்படைத் தளபதிகள் அட்மிரல் திசார சமரசிங்க, அட்மிரல் வசந்த கரன்னகொட ஆகியோர் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசினர். ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால், மேற்படி நான்கு முன்னாள் படைத் தளபதிகளும், அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டது தனக்குத் தெரியாது என்றும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் பொதுக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.