இலங்கை விடயம் தொடர்பில் இனியும் இந்தியா பொறுமை காக்க வேண்டுமா?
எல்லை தாண்டும் மீன்பிடி படகுகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது கண்டனத்துகுரியது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எல்லை தாண்டும் மீன்பிடி படகுகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இதை உறுதி செய்திருக்கிறார். எல்லைத்தாண்டி வந்து மீன் பிடிக்கும் படகுகளுக்கு இதுவரை அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ரூ.25 கோடியாக உயர்த்தும் வகையில் 1979ம் ஆண்டின் வெளிநாட்டு படகுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. உலக அளவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி பார்த்தால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டுவதே அபத்தம் ஆகும்.
குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும் எல்லைகளால் பறிக்க முடியாது. இதை பன்னாட்டு நீதிமன்றங்கள் பல முறை உறுதி செய்திருக்கின்றன.
இத்தகைய சூழலில், தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளுக்கு கோடிக்கணக்கில் தண்டம் விதிப்போம் என அச்சுறுத்துவது அந்நாட்டு ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிர் பீறிடுவதையே காட்டுகிறது. இதை அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் கூடாது.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இலங்கை சார்பில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கடைசியாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் கடந்த 28–ம் திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்த இலங்கை அரசு அதை இன்னும் நிறைவேற்றவில்லை.
மாறாக, அதன்பின் மேலும் 39 மீனவர்களை கைது செய்திருக்கிறது. மொத்தமுள்ள 125 தமிழக மீனவர்களும் எந்த நேரமும் விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்படும் போதிலும், அதற்கான எந்த அறிகுறியும் கண் தொலைவில் தென்படவில்லை.
இலங்கை நமது நட்பு நாடு... இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்யாவிட்டால் சீனாவின் பக்கம் சாய்ந்து விடும் என்று கூறி, கச்சத்தீவை தாரை வார்ப்பதில் தொடங்கி, ஆயுதம் வழங்கியது வரை அனைத்து உதவிகளையும் இந்தியா செய்தது. ஆனாலும், இலங்கை அரசின் சீண்டல்கள் தொடரும் சூழலில், இனியும் இந்தியா பொறுமை காக்க வேண்டுமா? என்பது தான் மக்களின் வினா.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தமிழக மீனவர்கள் மீது கை வைத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்.
மீனவர்கள் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை அறிவார்ந்ததாகவும், அக்கறை கொண்டதாகவும் இல்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விடாது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் பங்கேற்கும் தலைவர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று தொடர்ந்து யோசனை கூறி வருகிறேன்.
ஆனால், ஜெயலலிதா அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. நிலைமை இப்போது மோசமடைந்துள்ள நிலையிலாவது ஜெயலலிதா அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து நமது நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும், அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.