தளபதிக்கு தெரியாமல் இரகசிய முகாமா? முழுமையான விசாரணை தேவை என்கிறார் சுரேஷ்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கடற்படைத்தளபதி கருணாகொட ஆகியோருக்கு தெரியாது எவ்விதமான இரகசிய முகாம்களும் இருந்திருப்பதற்கான வாய்ப்பில்லையெனத் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் முழுமையான விசாரணையொன்று நடத்தப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்து ஐக்கிய நாடுகள் சபையின் காணமல்போனோர் தொடர்பான செயற்குழுவினர் திருமலை கடற்படைத்தளத்தில் இரகசிய தடுப்பு முகாம் காணப்பட்டமை உட்பட அது குறித்த பல்வேறு தகவல்களை வௌியிட்டிருந்தனர். இந்நிலையில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகருணாகொட அதனை நிரகாரிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த இரகசிய முகாம் தொடர்பாக பாராளுமன்றில் முதற்தடவையாக கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் கருத்து வௌியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதன்முதலாக பாராளுமன்றில் திருமலை கடற்படைத்தளத்தில் இவ்வாறான இரகசிய முகாமொன்று இருந்தது. குறித்த முகாம் கோத்தபாய என பெயரிடப்பட்டிருந்தது அல்லது அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது. கொழும்பில் கடத்தப்பட்ட மாணவர்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள். அங்கு 700இற்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இதனை விட 35இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனித்தனி வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய நிலைமை என்ன? அரசாங்கம் பகிரங்கப்படுத்தப்படவேண்டுமென கோரியிருந்தேன்.
அப்போது அரசாங்கம் அதனை முழுமையாக நிரகரித்ததுடன் அது பொய்யான தகவல் எனவும் பிரசாரம் செய்தனர். அவ்வாறிருக்கையில் கொழும்பில் கடத்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் இரகசிய முகாம்கள் இருந்தன என்பதையும் கடற்படைக்கு அதில் தொடர்பிருப்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலைவழக்கு தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளிலும் கடற்படையினருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயங்களை வைத்துப் பார்க்கும் போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்கள், கப்பம் கோரும் சம்பங்கள், படுகொலைகள் போன்றவற்றில் கடற்படையினருக்கு தொடர்பிருப்பது வௌியாகின்றது.
இந்நிலையில் தான் இங்கு வருகைதந்திருந்த ஐ.நா.குழுவினர் திருமலை கடற்படைமுகாமில் இரகசிய சித்திரவதை முகாம் காணப்பட்டுள்ளமை தொடர்பில் பல விடயங்களை வௌியிட்டுள்ளனர். தற்போது திருமலை கடற்படை முகாமில் இரகசிய தடுப்பு முகாமொன்று காணப்பட்டிருந்தது என்பது ஏறக்குறைய நிருபனமாகியுள்ளது.
மறுபுறுத்தில் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கருணாகொட இரகசிய முகாங்கள் இல்லையென மறுதலித்தாலும் அவர் புலிகளை தடுத்து வைத்திருந்தாக கூறியிருக்கின்றார்.எனவே திருமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கும் செயற்பாடுகளும் நடைபெற்றிருக்கின்றன என்பது நிரூபனமாகின்றது.
எனவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கடற்படைத்தளபதி வசந்த கருணாகொட ஆகியோருக்கு இவ்விடயங்கள் அறியாது நடந்திருப்பதற்கு எந்தவொரு வாய்ப்புக்களும் இல்லை. அவ்வாறிருக்கையில் தொடர்ந்தும் இவ்விடயத்தை மூடிமறைப்பதற்கான காரணங்களை கண்டறிந்து கூறிக்கொண்டிருப்பதை விடுத்து உண்மைகள் கண்டறியப்படவேண்டும். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.
வெறுமனே விடுதலைப்புலிகளை ஒழித்தவர்கள், பயங்கரவாதத்தை அழித்தவர்கள் என புகழாரம் சூட்டி அவர்களை காட்டிக்கொடுக்க மாட்டோமென அர்த்தங்கற்பிப்பதை விடுத்து முழுமையான விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவது அவசியமென்றார்.