Breaking News

பிரதமர் மற்றும் கூட்டமைப்பை இன்று சந்திக்கிறார் சமந்தா

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையடுத்து கொழும்பு ஹோட்டன் பிளேஸிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சமந்தா பவர் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இலங்கை வந்திருந்த சமந்தா பவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு, நேற்றைய தினம் யாழ் சென்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்ததோடு, பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.