Breaking News

இனப்பிரச்சனை தொடர்பில் சமந்தா பவருடனான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது : சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருடனான சந்திப்பின் போது காணிப்பிரச்சனை, கைதிகள் விடயம், இராணுவ மயமாக்கல் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள அமெரிக்கா தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், இந்த சந்திப்பானது மிகவும் பயனுள்ள விதத்தில் அமைந்திருந்தது. இதன்போது நாங்கள் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அவரிற்கு தெளிவுபடுத்தினோம்.

குறிப்பாக காணிப்பிரச்சனை, அரசியல் கைதிகள் விவகாரம், இராணுவமயமாக்கல், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இலங்கை தொடர்பிலான ஐ.நா தீர்மானம், மற்றும் அரசயில் தீர்வு தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தோம். என தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.