இந்தியா, இலங்கைக்கான பயணத்தை தொடங்கினார் சமந்தா பவர் – யாழ்ப்பாணமும் வருகிறார்
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இன்று தொடக்கம் வரும் 23ஆம் நாள் வரை இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இன்று புதுடெல்லி செல்லும் அவர், இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளையும், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடக்கும் பெண்கள் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவுள்ள அவர், அன்று பிற்பகல், உலக விவகாரங்களுக்கான இந்திய சபையில், ஐ.நா அமைதி காப்புப்படை தொடர்பாக உரையாற்றவுள்ளார்.
இதன் பின்னர் சமந்தா பவர் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார்.
இலங்கையில் அவர், இருதரப்பு கூட்டை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பையும், உள்நாட்டுப் போருக்குப் பின்னர், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நிலையான அமைதியை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான அமெரிக்காவின் ஆதரவையும் வெளிப்படுத்துவார்.
கொழும்பில் அவர், மூத்த அரசாங்க அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூக குழுக்கள், மற்றும் இளைஞர்களைச் சந்தித்துப் பேசுவார். யாழ்ப்பாணம் செல்லும் சமந்தா பவர், அங்கு உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், மற்றும் மோதல்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அமைப்புகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
உள்ளூர் ஊடகவியலாளர்களையும் சந்திக்கும் அவர், போரின் போது இலக்கு வைக்கப்பட்ட உதயன் நாளிதழ் பணியகத்துக்கும் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரியின் புதிய பிரிவு தொடங்க நிகழ்வில் பங்கேற்கும் சமந்தா பவர், போரின் போது சேதமாக்கப்பட்ட யாழ்.பொது நூலகத்துக்கும் செல்லவுள்ளார்.
பொது நூலகத்துக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, புராதன உள்ளூர் கையெழுத்துச் சுவடிகளை மீளமைப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவையும் அறிவிக்கவுள்ளார்.