தமிழ் கைதிகளை விடுவிக்க மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : கருணாநிதி
இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், அவ்வாறு வலியுறுத்தாவிட்டால் வரலாறு மன்னிக்காதெனவும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
‘இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு பெருவாரியாக வாக்களித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறைகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நம்பியே தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 73 சதவீத வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு 25 சதவீதமான வாக்குகளையும் தமிழ் மக்கள் அளித்தனர்.
ஆனால், அவ்வாறு கூறியமைக்கு மாறாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 9ஆம் திகதியன்று, 31 தமிழர்களை மட்டும் நிபந்தனை பிணையில் விடுதலை செய்தார். 200இற்கும் மேலான தமிழர்கள் இலங்கைச் சிறைகளில் தற்போது சாகும்வரை உண்ணா நோன்பு மேற்கொண்டிருக்கின்றனர்.
கடந்த 12ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி சிறிசேனவைச் சந்தித்து, அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியையும், மீண்டும் அந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியதையும் எடுத்துச் சொல்லி, அந்த வாக்குறுதியின்படி தமிழர்களை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
தமிழர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கி விட்டனர். நவம்பர் 13ஆம் திகதியன்று தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து முழு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன.
ஜனநாயக அமைப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துப் போராட்ட முறைகளையும் கடைப்பிடித்து தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை.
இந்திய அரசு, இப்போதாவது தலையிட்டு, தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதற்கான அவசரத் தேவையினை இலங்கை அரசுக்கு உணர்த்திட முன் வர வேண்டும். தமிழர்களுக்கு ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முதல் கட்டமாக, இலங்கைச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்களை உடனடியாக பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் இனியும் இந்திய மத்திய அரசு செயலற்று இருக்குமானால், வரலாறு மறக்காது, மன்னிக்காது என்பதை எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.