அரசியல் கைதிகள் விவகாரம் - வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தற்போது மோசமாகிவரும் நிலையில் அவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கையை விசேட அமைச்சரவையைக் கூட்டி எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அவசர கடிதமொன்று நேற்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் ஜனாதிபதி உட்பட குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கும் மற்றும் வெளிநாட்டு துாதுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் நிலை தற்போது மோசமாகி வரும் நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வடகிழக்கிலுள்ள அனைத்து சமூக மக்களும் நேற்று முன்தினம் பூரண கடையடைப்பில் ஈடுபட்டு தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மக்களது மனநிலையையும் கைதிகளின் அவசர நிலையையும் புதிய அரசாங்கம் மதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு மதிக்காது வன்மையான மனத்துடன் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. நாளை திங்கட்கிழமை அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு தீர்க்கமான பதிலை ஜனாதிபதி வழங்குவதாக கூறிய நிலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை தற்போது மோசமானதாகவுள்ளது. இதனால் கைதிகளுக்கு விபரீதமான நிகழ்வுகள் இடம்பெறலாம். இது எமக்கு மிகுந்த மனவேதனையளிக்கின்றது.
மேலும் அரசியல் கைதிகளின் விடுதலையை இம் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ஆரம்பத்தில் கூறிய நிலையில் 30 கைதிகள் மட்டுமே இதுவரை பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுதலைசெய்யப்பட்டவர்களில் சிலர் வேறுகுற்றச்சாட்டுடன் தொடர்புபட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பிணையில் விடுதலைசெய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டவர்களுக்கான ஆட்பினை 10 லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணை என நீதிமன்று அறிவித்துள்ள நிலையில் இதுவரைகாலமும் துன்பநிலையிலும் பொருளாதாரநிலையிலும் பின்தங்கிய குறித்த கைதிகளின் குடும்பங்கள் எவ்வாறு அவர்களை ஆட்பிணையில் எடுக்கமுடியும். எனவே ஜனாதிபதி இந்த விடயத்திலும் கவனமெடுக்க வேண்டும்.
மேலும் அரசியல் கைதிகளின் விடயத்தில் கடந்த அரசாங்கம் பின்பற்றிவந்த மனநிலையை மாற்றியமைத்து அவர்களின் விடுதலையை புதிய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.
யுத்தத்தினால் பாரிய மனித அவலங்களை கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை முன்வைத்து வந்த அரசாங்கம் எனக் கூறுகின்றது. இந்நிலையில் நல்லிணக்கத்தை வெளிக்காட்டும் வைகையில் அரசியல் கைதிகளின் விடுதலையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் காலதாமத்தப்படுத்துவதால் அதிலுள்ளவர்களில் யாராவது இறக்க நேரிடும். அவ்வாறு இடம்பெற்றால் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என விரும்பி வாக்களித்த நல்லெண்ணத்தை தட்டிக்கழிக்கும் விடயமாகவே பார்க்கப் படும். எனவே கைதிகள் விடயத்தில் அரசாங்கம் காலதாமதத்தை காட்டிநிற்காமல் மனிதாபிமான அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.