திருகோணமலை சித்திரவதை முகாம் தொடர்பில் 3 இராணுவத்தினர் கைது
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பாளர்கள் பகிரங்கப்படுத்திய திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கி வந்த சித்திரவதை முகாம் தொடர்பில், விசாரணை நடத்துவதற்காக இரண்டு அதிகாரிகள் உட்பட மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சித்திரவதை கூடம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைக்கு கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளின் பெயர்களை வெளியிட அந்த அதிகாரி மறுத்துள்ளதுடன், புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் பற்றி தகவல்களை வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் அமைத்துள்ள கோடாஸ் கேம் என்ற இந்த சித்திரவதை முகாம் தொடர்பாக உண்மை மற்றும் நீதி அமைப்பு என்ற சர்வதேச அமைப்பு 2015ம் ஆண்டு ஜூன் மாதம் தகவல் வெளியிட்டிருந்தது.
இதனடிப்படையில்,2010ம் ஆண்டு வரை குறித்த முகாமின் கட்டளை அதிகாரியாக லெப்டினட் கொமாண்டர் கே.சி.வெலகெதர என்பவர் பணியாற்றியுள்ளார்.
இதன் பின்னர், லெப்டினட் கொமாண்டார் ரணசிங்க என்பவர் முகாமுக்கு பொறுப்பாக பணியாற்றியுள்ளார்.எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் காணாமல் போனோர் தொடர்பான குழு வெளியிட்ட தகவலுக்கு அமைவான இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.