32 தமிழ் அரசியல் கைதிகள் நாளை மறுநாள் விடுதலை
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 தமிழ்க் கைதிகள் நாள் மறுநாள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளுடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக, 32 கைதிகள் தீபாவளிப் பண்டிக்கு முன்னதாக எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர்.
எஞ்சியோரில் 30 கைதிகள், எதிர்வரும் 20ஆம் நாளுக்கு முன்னதாக விடுதலை செய்யப்படுவர். தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் 48 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர்.
தண்டனை அளிக்கப்படாத எஞ்சிய தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனியே சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு அப்பால் அமைச்சரவை குழுவொன்றை நியமித்து துரித செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.என்றும் அவர் கூறியுள்ளார்.