Breaking News

இன்று 31 அரசியல் கைதிகளுக்குப் பிணை – உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மறுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகள் முதற்கட்டமாக இன்று பிணையில் விடுவிக்கப் படவுள்ளதாக,  சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

காவலில் வைத்துள்ள நீதிமன்றங்களில், 31 தமிழ் அரசியல் கைதிகள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போது, சட்டமா அதிபர் திணைக்களம் இவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக 32 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும்,  சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுக்களை அடுத்தே, இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 116 பேரும், நீதிவான் நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 52 பேரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமக்குப் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மூன்றாவது நாளாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 96 அரசியல் கைதிகளை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று சந்தித்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, இன்று 31 அரசியல் கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி அளிக்கப்படவுள்ளதாகவும், ஏனையோர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவர் என்றும், உண்ணாவிரதப் போராட்டத்தை கைதிகள் கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அவரது கோரிக்கையை அரசியல் கைதிகள் நிராகரித்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.