நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் - மைத்திரி
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வாறான நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘நாட்டின் பாதுகாப்பிற்கு சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டினை நாம் செய்யமாட்டோம். அதற்கான முழுப் பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.
எமது நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு பிரதானமாக காணப்பட்டது. கடந்த காலத்தில் எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்ப கிடைக்கவில்லை. தற்போது அது கிடைத்துள்ள நிலையில், மேலும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். அதன் மூலம் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.
நாட்டிற்கு மட்டுமன்றி நாளைய தலைமுறைக்கும் ஒரு கௌரவமான பாதுகாப்பு அவசியம். அந்தவகையில் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும், நாளைய தலைமுறைக்காகவும், உலகத்தின் முன்னேறிச் செல்லும் நாடுகள் வரிசையில் நாமும் இணைந்து செயற்பட்டு வெற்றிபெற வேண்டும்.
அதேபோன்று தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கங்களால் முடியாமல் இருந்த நிலையில், எமது அரசாங்கம் அதனை செய்துள்ளது. இற்றைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என இதுவரை 9 ஆணைக்குழுக்களை நாம் நிறுவியுள்ளோம்.
மேலும், நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டும் நோக்கில் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகமான நாட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் அவசியமான அனைத்து செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம்.
உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றிக்காட்டுவேன் என கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’ என குறிப்பிட்டார்.