மாவீரர் தின விளக்கேற்றியவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியவர்கள் பொலிஸாரால் அழைக்கப்ட்டு தீவிர விசாரணையின் பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என பலதரப்பினர் கடந்த 27ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டித்தனர்.
அன்றைய தினம் அரச திணைக்களமொன்றில் குறித்த நினைவேந்தல் நடைபெறவுள்ளதாக திணைக்களத்தின் உயரதிகாரியால் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனைக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, நினைவேந்தல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே குறித்த திணைக்களத்தின் பணியாளர்கள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரிக்கப்பட்டவர்களில் பலரது உறவினர்கள் யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லையெனவும், கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் பணியாளர்களின் முழு விபரங்களும் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.