மீனவர் கைது உடன் நிறுத்தப்படவேண்டும் : மோடிக்கு ஜெயா கடிதம்
இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில், நேற்று இலங்கை படையினரால் 8 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாக்கு நீரிணைப் பகுதியில் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதிசெய்ய தமிழக அரசு உறுதியாக உள்ள நிலையில், இதைத் தடுக்க மீனவர்களைக் கைது செய்தும், தாக்குதல்களை நடத்தியும் இலங்கைக் கடற்படை அத்துமீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இத்தகைய சம்பவங்களை இந்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை விடுவிப்பதில்லை என்ற இலங்கை அரசின் நிலைப்பாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு, பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மோடி அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.