ஐ.நா செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட குழுவினர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்விற்கு முன்னதாக செய்ட் செயத் ரா-அத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.
எனினும் பல்வேறு காரணங்களுக்காக அவரின் விஜயம் பிற்போடப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலப்பகுதியில் சீர்குலைந்திருந்த ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் திருப்பத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தக் குற்ற விசாரணைகளுக்காக செயத் ரா-அத் அல் ஹுசைன் தலைமையிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குழுவினருக்கு ராஜபக்ச அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மனித உரிமைகள் ஆணையாளர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு, விஜயத்திற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.